வருமான வரி குறித்த சில கேள்வி - பதில்கள்
1.தனியே சேமிப்பில் சீட்டு சேர்ந்து, அதன்மூலம் பெறும் தொகையை வங்கிக் கணக்கில் போட்டால், அதற்கு டி.டி.எஸ்.,(TDS) உண்டா? வங்கியில் அப்படி உண்டு என்றார்கள். மாத வருமானம், வரி கட்டிவிட்டு சேர்த்தது தானே?
வங்கியைப் பொறுத்தவரை, அந்தத் தொகை வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, அதிலும் வட்டித் தொகை ஆண்டுக்கு, 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் தான், டி.டி.எஸ்., பிடித்தம் செய்வர். வெறுமனே ஒரு தொகையை வங்கியில் போட்டாலே, அதற்கு டி.டி.எஸ்., பிடித்தம் செய்ய மாட்டார்கள். மேலும், மாத வருவாய்க்கு வருமான வரி செலுத்துவது வேறு, வைப்பு நிதி ஈட்டித் தரும் வட்டிக்கு வரி செலுத்துவது என்பது வேறு. இது இரட்டை வரி விதிப்பு ஆகாது.
2.ஒருவர் வங்கி கணக்கில் எவ்வளவு தொகைக்கு மேலே வைத்திருந்தால் வருமான வரி கட்டவேண்டும்? அதிகபட்சம் எவ்வளவு தொகை வைத்து கொள்ளலாம், வருமான வரி கணக்கு காட்டாமல் இருப்பதற்கு?
வங்கியின் சேமிப்புக் கணக்கில் இவ்வளவு தொகை தான் வைத்திருக்க வேண்டும் என்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ஒருவருடைய கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டாலோ, செலவு செய்யப்பட்டாலோ, அது வருமானத் துறையின் கவனத்துக்குப் போகும். அது எந்த வழியில் வந்தது, உரிய வரிப்பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா என்று ஆராயப்படலாம்.
3.ஆண்டுக்கு ஒரு முறை இலவசமாக என் கடன் மதிப்பீடு அறிக்கையை (சிபில் ஸ்கோர்) பெறுவதற்கான வழிமுறைகள் என்ன?
‘சிபில்’ (https://www.cibil.com/benefits-of-cibil-subscription) என்ற வலைத்தளத்திற்குச் சென்று, ‘No thanks. Show me my Free Annual CIBIL Report’ என்ற லிங்கைத் தட்டினால், உங்களைப் பற்றிய விபரங்களைப் பதிவு செய்து கொள்ளவும் அதை உறுதிப்படுத்தவும் கோரப்படுவீர்கள். இதன்மூலம், ஆண்டுக்கு ஒரு முறை இலவசமாக, சிபில் ஸ்கோர் பெற்றுக்கொள்ள முடியும்.
4.எனக்கு வயது 46. நான் இதுவரை வருமான வரி எதுவும் தாக்கல் செய்யவில்லை. வீடு விற்பனை செய்த வகையில் வந்த பணம் மற்றும், என் மனைவியின் மாத சம்பளத்தை என் வங்கி கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்த வகையிலும் கிட்டத்தட்ட, 9 லட்சம் ரூபாய் இருப்பு வைத்திருக்கிறேன். நிறைய பேர், 2 லட்சத்திற்கு மேல் இருந்தாலே வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்று பயமுறுத்தி வருகிறார்கள். அவசியமா?
வங்கிக் கணக்கில், 2 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் வைத்திருந்தாலே, வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. வீட்டை விற்றேன் என்று தெரிவித்துள்ளீர்கள். அதில் நீண்டகால ஆதாய வரி அல்லது குறுகிய கால ஆதாய வரி செலுத்த வேண்டிய வாய்ப்பு வந்திருக்கலாம். அப்படி வரி செலுத்த வேண்டிய அளவுக்கு லாபம் இல்லை என்றால், அதையும் தெரிவித்து, வருமான வரி, ‘நில் ரிட்டர்ன்’ தாக்கல் செய்துவிடுவது நல்லது..
Post a Comment