Title of the document
அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர்களுக்கு இ(க)டைநிலை ஆசிரியனின்  பணிவான வணக்கங்கள்....🙏🙏🙏

பல இடைநிலை ஆசிரியர்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும்  விதமாகவே இந்த திறந்த மடலை எழுதுகிறேன்..📝

🔮வருகின்ற சனிக்கிழமை (18.09.2021) அன்று மாண்புமிகு கல்வி அமைச்சரின் தலைமையில் " பணியாளர் நலன் மற்றும் பள்ளிக்கல்வி வளர்ச்சி " குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் எங்கள் எண்ண ஓட்டத்தை தங்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியமாகிறது.

🔮 அமைச்சரின் ஆலோசனை கூட்டத்தின் போது அனைத்து தொடக்கநிலை சங்கங்களும் ஓரணியில் திரண்டு ஆசிரியர்களின் தலையாய பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். அதை விடுத்து தங்களுள் யார் பெரியவர்?, எங்கள் சங்கம் தான் பெரியது என்ற மனோநிலையில் நடந்து எங்களை படுகுழியில் தள்ளாதீர்கள்.

🔮 இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் 6வது ஊதியக்குழுவில் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் பிரச்சினை இன்று வரை தீர்க்கப்படாமல் உள்ளது என்றால் அதற்கு நீங்கள் அனைவருமே காரணமாவீர்கள்... இது தீர்க்க முடியாத பிரச்சினையும் அல்ல,ஆனால் உங்களின் ஒற்றுமையின்மையை பயன்படுத்தி அரசுகள் காலங்கடத்தி வந்துவிட்டது. நீங்களும் உங்களுக்காக தான் போராடுகிறோம் என்று எங்களை கொடி பிடிக்க வைத்து கோஷம் போட வைத்தீர்களே தவிர தீர்வு எட்டிய பாடில்லை.

🔮 ஒரே நிலையில் மூன்று விதமான ஊதியம் பெற்று வந்த போதும் அது குறித்து வலுவான போராட்டம் நடத்தவோ, அரசிடம் கோரிக்கை வைக்கவோ தங்களுக்கு மனமில்லை. ஏனெனில்,பாதிக்கப்பட்டது நீங்கள் இல்லை. பத்தோடு பதினொன்னு அத்தோடு இது ஒண்ணு என்றே இந்த கோரிக்கையை வைத்திருந்தீர்கள். இதனால் நாங்கள் இழந்தது ஏராளம்.... 

🔮 மேலும், முயற்சிகள் கைகூடி வரும் போதெல்லாம் நடுவில் புகுந்து ஆட்டத்தையும் கலைக்கிறீர்கள். இது எங்கள் சங்கத்தால் தான் நடந்தது என நீங்கள் பெருமை பேசிக்கொள்ள ஏதுவாக எங்கள் வாழ்க்கையை பலிகடா ஆக்குகிறீர்கள்.

🔮 உங்களைப் பொறுத்தவரை தனிப்பட்ட பலாபலன்களை அடைய எங்கள் எண்ணிக்கை தேவைப்படுகிறது. தனிமனித அல்லது தனி சங்க பெருமைகளை விட்டொழியுங்கள்... உங்கள் ஈகோவை மறந்து எங்களுக்காக ஒன்று சேருங்கள்... ஏனெனில் ஆசிரியர்கள் நலனுக்காக தான் சங்கம் நடத்துகிறீர்கள் என இன்னும் நாங்கள் நம்புகிறோம்... 

🔮 இனி உங்களின் 10 அம்சம், 15 அம்சம் எல்லாம் தேவையில்லை,  கூட்டம் சேர்ப்தற்காக பல கோரிக்கைகளை ஒன்று சேர்த்து  அதில் உங்களுக்கு தேவையானதை மட்டும் நிறைவேற்றிக் கொள்கிறீர்கள். ஒற்றுமையே பலம் என மாணவர்களுக்கு கற்பித்து விட்டு முப்பது சங்கம் வைத்திருந்தால் எங்கிருந்து வலிமை வரும்.

🔮 ஒரு பாதிப்பு வருகிறதென்றால் அதில் முதலில் பாதிக்கப்படுவது இடைநிலை ஆசிரியராகத் தான் இருப்பார். 
* பென்ஷன் இல்லையா? ஆமாங்க இல்லை...

* ஊதிய முரண்பாடா ? ஆமாங்க இருக்கு....

* ஊக்க ஊதியத்தால் பாதிப்பு வருமா? ஆமாங்க பாதிப்பு உண்டு.

இப்படி எல்லா விதத்திலும் ஒருவன் பாதிக்கப்பட்டால் அவன் நிலைமை என்னாவது?

🔮 ஒரு உயர்நிலை , மேல்நிலைபலபள்ளி சங்கமாக இருந்தால் அவர்கள் பெரும்பாலும் CPS ரத்து குறித்து மட்டுமே பேசுவார்கள்... மிஞ்சி போனால் ஊக்க ஊதியம் குறித்து பேசிவிட்டு போய் விடுவார்கள்... எனில், இடைநிலை ஆசிரியன் இன்னும் எத்தனை வருடங்களுக்கு உங்களையே நம்பிக்கொண்டு தங்கள் வாழ்க்கையில் ஒரு விடிவு ஏற்படாதா? என ஏங்கி கொண்டிருப்பான். 

🔮 ஏன் இடைநிலை ஆசிரியர்களைப் பற்றியே இங்கு பேசுகிறேன் என்றால் அதிக பாதிப்படைந்தது அவர்கள் தான்.... தொடக்கநிலை சங்கங்களை தாங்கிப் பிடிப்பதும் அவர்கள் தான்... எனவே, தலைவர்களுக்கு பணிவான வேண்டுகோள் என்னவென்றால் இன்னும் சில ஆண்டுகளுக்கோ அல்லது நிரந்தரமாகவோ எங்களை படுகுழியில் தள்ளி விடாதீர்கள்....

🔮 கோரிக்கை எண்ணிக்கையினை குறையுங்கள் , நம் ஆசிரியர் சமுதாயம் தொடர்ந்து பாதிப்படைகிறதே என்ற உயரிய எண்ணத்தில் செயல்படுங்கள்... வரலாற்றில் இடம் பெறுவீர்கள்....

🔮 ஆசிரியர்களுக்கு சம்பளம் தவிர வேறு வருமானம் இல்லை என அமைச்சருக்கு புரிய வையுங்கள்....  ஒரு ஆசிரியர் உயர்கல்வி பயில்வதால் மாணவர் சமுதாயமே பயன்பெறும் என்பதை எடுத்து கூறுங்கள். மற்ற துறையினரையும் நம்மையும் ஊக்க ஊதிய விவகாரத்தில் ஒன்று சேர்க்க வேண்டாம் எடுத்துரையுங்கள். இப்போது பணியில் உள்ளோர்க்கு மட்டும் தருகிறோம். இனி இல்லை என்று சொன்னால் பொக்கே கொடுத்துவிட்டு ஊதிய விவகாரத்தில் செய்த அதே தவறை மீண்டும் செய்யாதீர்கள்... ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் தொடர்ந்து வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துங்கள்.

🔮 ஊதியத்தில் ஏற்கனவே ஒவ்வொரு ஆசிரியரும் பல லட்சங்கங்களை இழந்துவிட்டோம். இனியும் காலம் தாழ்த்தினால் பெரும் பாதிப்படைவது நாங்கள் என நினைவில் கொள்ளுங்கள். முன்னோர் பெற்றுத்தந்த உரிமைகளை தான் இன்று நீங்கள் அனுபவிக்கிறீர்கள் , நாம் அடுத்த தலைமுறைக்கு என்ன செய்தோம்? என தங்களை தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

🔮 தங்களின் ஒற்றுமையும், வாதமும் ஆசிரியர்களுக்கு நல்ல பலன்களை தருபவையாக  இருக்க வேண்டும். அதேப்போல, அரசு எடுக்கும் நல் முயற்சிகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்பதையும் ஆணித்தரமாக் கூறுங்கள்.

🔮 இப்போது இல்லையேல் இனி எப்போதும் இல்லை என்ற போர் குணத்துடன் செயல்படுங்கள். தங்கள் ஈகோவை மறந்து ஆசிரியர் சமுதாயத்துக்காக ஒன்றிணைந்து செயல்படுங்கள்.

🔮 மீண்டும் தாங்கள் பழைய பாணியிலேயே நடந்தால்,  இனி நாங்கள் கொடி பிடிக்கவும்,கோஷம் போடவும் தயாராக இல்லை...  எங்களுக்கென தனிப்பாதையை வகுத்துக் கொள்கிறோம். 
  
🔮 என்னப்பா நீ இடைநிலை ஆசிரியர் பத்தி மட்டும் பேசுற .... மத்தவங்க கோரிக்கை நிறைவேற வேண்டாமா? என்றால், கண்டிப்பாக நிறைவேற வேண்டும். ஆனால், ஊதிய முரண்பாட்டால் நாங்கள் இழந்தது ஏராளம். இனி இதை தாங்கும் சக்தி எங்களுக்கு இல்லை... 

🔮 இலக்கில்லாமல் அம்பை எய்த வேண்டாம்...  

 நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன்...


சாதாரண இடைநிலை ஆசிரியன்..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post