Title of the document
18 ஆண்டு காலக் கோரிக்கையான CPS 
ஒழிப்பு என்பது இன்றளவும் கோரிக்கையாகவே உள்ளது. இதற்காக எந்தச் சங்கமும் போராடவில்லை என்பதைவிட யாவரும் சேர்ந்து போராடவில்லை என்பதே சரியாக இருக்கும்.

ஆசிரியர்கள் & அரசு ஊழியர்களில் குறிப்பாக CPS பாதிப்பாளர்கள் பல்வேறு சங்கங்களில் இருப்பீர்கள். இதில் ஏதேனுமொரு சங்கமோ / கூட்டமைப்போ வலுவான போராட்டத்தைக் கட்டமைத்து இறங்கினால் மாற்றுச் சங்க உறுப்பினரான நீங்கள் அப்போராட்டத்தில் கலந்து கொள்வதில்லை. . .ஏன்?

கோரிக்கை நமக்கானதாக இருக்க, அதில் இணைவதில் தடுப்பது எது? வேறெதுவுமில்லை இயக்கங்களின் பெயர்கள் தான். நமது இயக்கம் அதில் கலந்து கொள்ளவில்லை எனவே நாம் செல்ல வேண்டாம் என முடிவு செய்துவிடுகிறோம். என்றாகிலும் அத்தகைய தலைமையைப் பார்த்து ஏன் வலுவான போராட்டத்தை நடத்தவில்லை என்று கேட்டிருப்போமா என்றால் அதுவும் குறைவே.

மொத்தத்தில் ஒட்டுமொத்த பெரும்பான்மையான CPS பாதிப்பாளர்களும் களத்தில் வந்து நிற்க சங்கங்கள் கடந்த ஒரு பொது நடவடிக்கை தேவையாக உள்ளது. அத்தேவையை நிறைவு செய்து யாவரையும் களத்திற்கு நேராக அழைத்துச் செல்லும் நோக்கில் CPS பாதிப்பாளர்களால் தொடங்கப்பட்ட ஒரு இயக்கமே (Movement) CPS ஒழிப்பு இயக்கம். உண்மையாகப் போராடும் சங்கங்களுக்கு எதிரான சங்கமல்ல இது.

கடந்த காலங்களில் பலகட்ட தொடர் இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் CPS ஒழிப்பு இயக்க நடவடிக்கைகளில் பங்கெடுத்துவரும் யாவருமே இன்றுவரை துறைரீதியாகத் தாங்கள் சார்ந்திருக்கும் சங்கங்களின் உறுப்பினர்களே.

ஒற்றைக் கோரிக்கையோடே தீர்க்கமாக இறங்கியாக வேண்டிய தேவையை உணர்ந்து எந்தவொரு கட்சிப் பின்புலமும் இன்றி கோரிக்கையை முன்வைத்து உருவானதே CPS ஒழிப்பு இயக்கம்.

அஇஅதிமுக ஆட்சியில் திமுக சங்கமென்றும் திமுக ஆட்சியில் அதிமுக சங்கமென்றும் தங்களது வசதிக்கேற்ப சிலர் புரிதலின்றி / உள்நோக்கத்தோடே முத்திரை குத்தினாலும், அஇஅதிமுக ஆட்சியில் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட CPS ஒழிப்பு இயக்கம் ஆளும் & எதிர்த்தரப்பு அரசியல் கட்சிகள் அனைத்திற்குமே CPS நீக்கம் குறித்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

எதிர்க்கட்சியாக /  ஆட்சியில் இல்லாது இருக்கும் போது CPS-ஐ ஒழிப்போம் என்பதும் பின் ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் அதனைக் கண்டு கொள்ளாது விடப்பட்டதும் 18 ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்க இந்த 18 ஆண்டுகளில் இறந்த / ஓய்வுபெற்ற CPS பாதிப்பாளர்களின் குடும்பங்கள் எத்தகைய இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன என்பது சொல்லில் சொல்ல இயலா சோகமே!

அப்பெருஞ்சோகத்தில் இருப்போருக்கு நாமோ / வேறு யாருமோ என்ன பதில் கூற இயலும்? அவர்களின் குடும்பச் சூழலை இனி மேம்படுத்த இயலுமா? முடியவே முடியாது. இன்று அவர்கள்படும் இன்னலுக்குள் நாமோ / நமது குடும்பமோ வீழ்ந்துவிடுவதற்கான குழி இன்னமும் திறந்த நிலையில் தானே உள்ளது.

ஆம். தற்போதும், தேர்தல் வாக்குறுதியாக அச்சிலும் பேச்சிலும் CPS-ஐ ஒழித்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தற்போது மௌனம் காக்கிறார். அவரது நிதி அமைச்சரோ வழங்க முடியாது என்று அறிக்கைவிடுகிறார்.

உதாவதினி ஒரு தாமதம்!
உடனே எழு தோழா!

என்று நமது வாழ்வாதாரக் கோரிக்கைக்காக மீண்டும் களத்தில் இறங்கியாக வேண்டிய தேவை காலம் உணர்த்திக் கொண்டிருக்கிறது. முதல்வரின் மௌனம் கண்டு இன்னும் கொஞ்சம் பொறுமை காப்போம் என்று பலர் அமைதியாகியுள்ள இச்சூழலில்,

நாள்தோறும் மடியும் CPS பாதிப்பாளரின் குடும்பங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறோம்? 

நாமும் அமைதிகாக்கப் போகிறோமா?

அல்லது

இன்றைய அமைதி நமக்கான நாளைய எமன் என்பதை உணர்ந்து உரத்த சத்தமாய் நமது & நமக்குப் பின்னான நமது குடும்பத்தின் வாழ்வாதாரக் கோரிக்கைக்காக முழங்கப் போகிறோமா?
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post