Title of the document
*வன்மையாக கண்டிக்கிறோம்.*

கடலூர் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய *தொழிலாளர் நலத்துறை அமைச்சர்* 
*திரு. கணேசன் அவர்கள்* தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் ஊதியம் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசியுள்ளார்.

அவருடைய பேச்சு ஆசிரியர்களின் பணிகளையும், அதற்காக பெறுகின்ற ஊதியம் குறித்தும்  இழிவு படுத்துவது போல அமைந்துள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தையும்   தனியார் பள்ளிகளின் ஆசிரியர் ஊதியத்தையும் ஒப்பிட்டுப் பேசி அரசு பள்ளி ஆசிரியர்களை இழிவுபடுத்தி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

*ஆசிரியர்களின் ஊதியத்தை ஏன் எந்த ஒரு அரசியல்வாதியும் அவர்களுடைய ஊதியம் மற்றும் அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள்,  அவர்களுக்கு கிடைக்கும் ஓய்வு ஊதியம் ஆகியவற்றுடன் எப்போதும் ஒப்பிட்டு பேசுவது இல்லை* என தெரியவில்லை.

*ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றால் கூட எடுத்த எடுப்பிலேயே அவர்கள் பெறும் ஊதியம் என்ன?  கிடைக்கும் சலுகைகள் என்ன?  இறுதியாக அவர்களுக்கு ஐந்து ஆண்டு காலத்திற்கு பின்னர் கிடைக்கும் ஓய்வு ஊதியம் என்ன? என்ற விவரங்களை வெள்ளை அறிக்கையாக எப்போது வெளியிட்டு மக்களுக்கு உண்மையை தெரிவிப்பார்கள்.*

எத்தனை ஆண்டுகள் பணி செய்தாலும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஓய்வு ஊதியம் இல்லாதபோது தங்களைப்போன்ற சிலருக்கு மட்டும் ஓய்வு ஊதியம் வழங்குவது என்ன நியாயம்? என்பதை எப்போதாவது தங்களைப் போன்றவர்கள் சிந்தித்து பார்த்துள்ளீர்களா?

அல்லது *தமிழ்நாட்டில் பணிபுரியும் எத்தனை தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மாதத்திற்கு 1,25,000  ரூபாய் ஊதியம் பெறுகிறார் என்ற அறிக்கையை வெள்ளை அறிக்கையாக வெளியிடுங்கள் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்.*

கடந்த ஆட்சியாளர்கள் ஆசிரியர்களையும்,  அரசு ஊழியர்களையும் இழிவாக பேசினார்கள் என்ற காரணத்தினால் தான் தற்போதைய அரசு அமைந்துள்ளது என்பதனை பல அமைச்சர்கள் மறந்துவிட்டு பேசி வருகிறார்கள் என நினைக்கிறேன்.

அரசியல்வாதிகளின் பேச்சு இதுபோல உண்மைக்குப் புறம்பாக தகவல்களைச் சொல்லி இழிவு படுத்துவது போல தொடர்ந்து வந்து கொண்டிருந்தால்  அடுத்து வரும் தேர்தல்களில் இதன் தாக்கம் நிச்சயமாக எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மாத ஊதியத்தை மட்டும் பெற்று வாழ்ந்து வரும் ஆசிரியர் இனத்தை  வருவோர், போவோர் எல்லாம் இழிவுபடுத்தும் செயலை செய்வது  ஏற்புடையது அல்ல.

மற்ற துறை அதிகாரிகளை போலவோ அல்லது அரசியல்வாதிகளை போலவோ பிறவகை வருமானங்கள் பெறாமல் பல ஆசிரியர்கள் தங்களுடைய சொந்த பணத்தை மாணவர்களுக்கும்,  பள்ளிக்கூடங்களுக்கும் செலவு செய்து சிறப்பாக செயல்படுவதை  எந்த ஒரு அமைச்சரும் பாராட்டாமல் இருந்தால் கூட பரவாயில்லை,  இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான கருத்தை சொல்லி மன உளைச்சலை ஏற்படுத்தாமல் இருந்தால் போதும்.

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் 8,000 ரூபாய் தான் ஊதியமாக தருகிறார்கள் என்று அமைச்சர் குறிப்பிடுகிறார்.

ஏன் தனியார் பள்ளி முதலாளிகள் இடம் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்னும் அதிகமான தொகையை ஊதியமாக வழங்க வேண்டும் என உத்தரவிட வேண்டியதுதானே?

ஒவ்வொரு தனியார் பள்ளியும் லட்சக்கணக்கில் அல்லது பல ஆயிரக்கணக்கில் ஒவ்வொரு மாணவர்களிடமும் கல்வி கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு 8 ஆயிரம் ரூபாயை மட்டும் ஏன் ஊதியமாக வழங்கி இருக்கிறீர்கள் என அவர்களை எப்போதாவது கேட்டு உள்ளீர்களா?

தனியார் பள்ளிகளை வைத்திருக்கக்கூடிய நபர்களில் பெரும்பாலானோர் ஆளுங்கட்சி அல்லது எதிர்க் கட்சியைச் சார்ந்தவர்களாக அல்லது அவர்களது உறவினர்களாக  இருக்கின்ற காரணத்தினால் அவர்களிடம் இவர்கள் வாயை திறக்க முடியாது போல.

*தனியார் பள்ளிகளில் பாடம் நடத்தினால் மட்டும் போதும் என்ற சூழலில் அவர்கள் கற்பித்தல் பணியை மட்டுமே செய்து வருகிறார்கள்.*

அரசு பள்ளி ஆசிரியர்களின் நிலை வேறு என்பதனை அமைச்சர் மறந்துவிட்டார்.

*அரசுப் பள்ளி ஆசிரியர் என்பவர் பள்ளிக்கூடத்தில் துப்புரவு பணியாளராகவும், அலுவலக உதவியாளராகவும்,  சத்துணவு மேற்பார்வையாளராகவும், புள்ளி விவரங்களை வழங்கக்கூடிய அலுவலக எழுத்தர் போலவும், உயர் அதிகாரிகளுக்கு பயந்து நடுங்கும் நிலையில்  செயல் பட்டுக்கொண்டு மீதி நேரங்களில் கற்பித்தல் பணியை செய்ய கூடிய  நிலையை உருவாக்கியது யார் என்பதனை மறந்து விட்டு போகிற போக்கில் ஆசிரியர்களை குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது.*

அரசு பள்ளிக்கூடங்கள் என்பது அரசின் நலத்திட்டங்களையும்,  புள்ளி விவரங்களையும் சேகரிக்க கூடிய ஒரு இடமாக செயல்படக்கூடிய சூழலில் தனியார் பள்ளிகளுக்கு எப்படி போட்டியாளராக செயல்பட முடியும்?.

அப்படி போட்டி போட்டுக் கொண்டு சிறப்பாக செயல்பட்டால் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் பள்ளிக்கூடங்களுக்கு மாணவர் சேர்க்கை இல்லாமல் போய்விடும் என்பதில்  தங்களைப் போன்றவர்கள் எப்போதும் கண்ணும், கருத்துமாக இருக்கத்தானே செய்கிறார்கள்.

அரசு பள்ளிகளை சிறப்பாக செயல்படுத்துவதற்கு எந்த அரசாங்கம்  ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்பதனை கூறுங்கள்  பார்ப்போம்.

*பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து பொதுவெளியில் பேசுவதுபோல ஆசிரியர்களின் ஊதியம் குறித்தும் ஆசிரியர்கள் மத்தியில் பொய்யான தகவல்களை தெரிவித்து பேசியது,  பாராட்டு விழாவில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழக ஆசிரியர்களுக்கும் மிகுந்த வேதனையை அளிக்கிறது என்பதை மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நினைவூட்டுகிறோம்.*

எதிர்காலங்களில் இதுபோன்ற இழிவுபடுத்தும் கருத்துக்களை கூறுவதை விட்டு விட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு அரசுப்பள்ளிகளை உயர்த்துவதற்கான பணிகள செய்யுங்கள் மாண்புமிகு அமைச்சர் அவர்களே.

விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற ஆசிரியர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழக ஆசிரியர்களும் இவரின் கருத்துக்கு எதிராக குறைந்தபட்சம் தங்களுடைய கண்டனத்தை வாட்ஸ் அப்பிலாவது அனைத்து மாவட்டங்களிலும் தெரிவிப்போம்.

*கற்பித்தல் பணியை செய்யும் ஆசிரியர்கள் இறைவனுக்கு சமம் என்பார்கள்.*

ஆனால் நடைமுறையில் ஆசிரியர்கள் என்பவர்கள் ஒரு கேலிப் பொருளாகவும், சும்மா உட்கார்ந்து கொண்டு ஊதியம் பெறக்கூடிய நபர்களாகவும் சித்தரிக்கப்படுவது சமுதாய கேடுகளை உருவாக்கும் என்பதனை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

*DRPGTA,*
கரூர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post