*ஒழுங்கு நடவடிக்கை நீக்கம் குறித்த முதல்வரின் கடிதம் உணர்த்துவது என்ன?*
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_
ஜாக்டோ-ஜியோ-வே தற்போது தமது கோரிக்கைகளை முழுமையாகக் குறிப்பிடாது அறிக்கை வெளியிடும் சூழலில், கோரிக்கைகள் அனைத்தையும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சருக்கு நன்றி!
முதல்வரே குறிப்பிட்டுள்ள ஆசிரியர் & அரசு ஊழியர்களின் போராட்டக் கோரிக்கைகள் எதையும் தற்போதுவரை செயல்படுத்த முன்வராத நிலையில்,
சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவுள்ள சூழலில், போராட்ட காலத்தில் தொடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை மட்டும் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளார் தமிழக முதலமைச்சர்! சிறு மகிழ்ச்சி!
29.01.2019 வேண்டுகோளை ஏற்று 30.01.2019-ல் வேலைக்குத் திரும்பியதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல இரண்டாண்டுகள் ஆனது வியப்பாக உள்ள சூழலில். . .
அப்போராட்டத்திலேயே பங்கெடுக்காத சங்கம் ஒழுங்கு நடவடிக்கைகளை நீக்கக் கோரிக்கை வைத்ததாக முதல்வர் குறிப்பிட்டுள்ளது பெரும் வியப்பாக உள்ளது.
2017 போராட்டத்தில் ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கைகளை ஏற்று, சென்னை உயர்வழக்காடு மன்ற மதுரைக்கிளையும் அளித்த நிர்பந்தத்தால்தான் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் தமிழ்நாட்டில் குறைகளோடே நடைமுறைப்படுத்தப்பட்டன என்பதை முதல்வரின் கவனத்திற்கு யாரும் கொண்டுசெல்லவில்லை போலும்.
மொத்தத்தில், ஜாக்டோ-ஜியோவிற்கு எதிரான பொதுநல வழக்கில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்காகவும், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கெடுக்காத சங்கத்தின் கோரிக்கைக்காகவும் இரண்டாண்டுகள் கழித்து ஒழுங்கு நடவடிக்கைகளை மட்டும் திரும்பப் பெற்தோடே. . .
நியாயமான கோரிக்கைகளைப் புறந்தள்ளியதில்லை என்று குறிப்பிட்டு, ஜாக்டோ-ஜியோவின் நியாயமான கோரிக்கைகளை நியாயமற்றதென மீண்டும் அறிக்கை வழியே
உதாசீனப்படுத்தியுள்ளார்.
மேலும் மறப்போம் மன்னிப்போம் எனக் குறிப்பிட்டு, தங்களின் பறிபோன உரிமைகளை மீட்க பத்தாண்டுகளுக்கும் மேலாகப் போராடிவரும் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் ஏதோ பெருந்தவற்றை செய்துவிட்டது போலவும் அதைத் தாம் பெரிய மனதுவைத்து மறந்து மன்னித்துவிட்டது போலவும் தனக்குத் தானே பெருமிதம் கொண்டுள்ளார்.
எனவே, போராட்டக் கோரிக்கைகள் இன்றளவும் பொருட்படுத்தப்படாது, அநியாயமானவையாக ஆட்சியாளர்களால் சித்தரிக்கப்படும் நிலையில், போராடிய காரணத்திற்காகத் தொடுக்கப்பட்ட அடக்குமுறைகளைத் திரும்பப் பெற்றதற்காக . . .
நான் நேரில் கோரிக்கை வைத்தேன். . .
நான் தனிப்பிரிவில் கோரிக்கை வைத்தேன். . .
நான் போராட்டத்தை அறிவித்தேன். . .
அதனால் தான் ஒழுங்கு நடவடிக்கைகள் திரும்பப் பெறப்பட்டன என நமக்கு நாமே போலியான சமாதானம் கூறிக் கொண்டிருக்காமல். . .
நமது நியாயமான கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறத் தொடர்ந்து முழங்குவோம்!
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம் :
கடந்த இரண்டு ஆண்டுகளாக நமது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்தி, மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி வழக்குப் போட்டு ஓய்வூதியம் கேட்டுப் போராடிய நமது தோழர்களைச் சிறையில் தள்ளி சஸ்பெண்ட் செய்த தமிழக அரசு தற்போது நம்மை மன்னித்து நடவடிக்கைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்திருப்பது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோபத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் தேர்தல் திருவிழாவை முன்னிட்டுச் செய்திருக்கும் கண்துடைப்புச் செயலாகும்.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பழைய ஓய்வூதியம் பெறுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு போராடிய இலட்சக்கணக்கான இளைய போராளிகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், ஊதிய உயர்வுக்காகப் போராடுகிறார்கள் என்று பொதுமக்களை நமக்கு எதிராகத் தூண்டி விட்டவர்கள் யார் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. எந்த அரசியல் சார்பும் அற்ற இலட்சக்கணக்கான ஊழியர்கள் களத்தில் தங்கள் வாழ்வாதாரப் பிரச்சினைக்காக நிற்பதை உணராமல், எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தூண்டி விட்டதாகத் தாங்களாகவே ஒரு முடிவுக்கு வந்து நம்மை அவமானப்படுத்தியவர்கள் யார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இலட்சக்கணக்கான பெண் ஊழியர்களைப் போராட்ட காலத்தில் சிறைப்படுத்தி இரவு நேரங்களில் அடிப்படை வசதிகள் கூட வழங்காமல் நள்ளிரவில் வீடுகளுக்குச் செல்லும்படியாக விடுவித்தவர்கள் யார் என்பதையும் நாம் மறக்கக் கூடாது.
எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக நம்மைக் கிள்ளுக்கீரையாக நினைத்து ஒருமுறை கூட, எந்த ஒரு ஊழியர் அமைப்பின் குரலையும் சிறிதும் காது கொடுத்துக் கேளாத இந்த அரசாங்கத்தின் போக்கினையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தற்போதைய நிலையில் மறப்பதா, மன்னிப்பதா என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்களாகிய நாம்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர வேறு யாரும் முடிவு செய்யக்கூடாது. முடிவு செய்யவும் முடியாது.. ஒருவேளை பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்தினால் மட்டும் அனைத்தையும் மறந்து, மறப்போம்.. மன்னிப்போம் என்ற முடிவை ஒட்டுமொத்தமாக நாம் அனைவரும் எடுக்கத் தயாராவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவண்.
பழைய ஓய்வூதியத் திட்டம் பெறுவதற்காக எதற்கும் தயாராக உள்ள, தேர்தலை எதிர்நோக்கும், எவ்விதச் சார்புமற்ற இலட்சக்கணக்கான CPS ஊழியர்களுள் ஒருவன்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment