Title of the document

 மனிதநேயத்தின் மறுபெயர் உதயச்சந்திரன் IAS.,

உதயச்சந்திரன் IAS
உதயச்சந்திரன் IAS


ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள ராயபாளையம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி சுப்பிரமணி மகள் கோபிகா. பிளஸ் டூ முடித்துள்ள கோபிகா சென்னையில் நாளை முதல் நடைபெற உள்ள மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க தன்னுடைய ஆவணங்களை எல்லாம் சரி பார்த்துக் கொண்டிருந்தபோது பிறப்பிட சான்றிதழில் தன்னுடைய பெயரில் எழுத்துப்பிழை இருந்ததை கடைசி நேரத்தில் கண்டுபிடித்துள்ளார்.

இ சேவை மையம் மூலம் புதிதாக பிறப்பிடச் சான்றிதழ் விண்ணப்பித்து விட்டு காத்திருக்கிறார். சான்றிதழ் கிடைக்க பொதுவாக பத்து பதினைந்து நாட்கள் ஆகும். என்ன செய்வதென்று தெரியாமல் தனது தோழி ஒருவரிடம் பேசியுள்ளார்.

அந்தத் தோழியின் தந்தைக்கு கல்விக்காக யார் உதவி கேட்டாலும் உடனே செய்யும் சுபாவம் கொண்டவர் திரு த. உதயச்சந்திரன் ஐஏஎஸ் என்று அவருக்கு தெரிந்திருக்கிறது.  

திரு த. உதயசந்திரன் அவர்களின் ஈமெயில் முகவரியை பெற்று மாணவி கோபிகா உதவிகேட்டு ஈமெயில் அனுப்பியிருக்கிறார்.

இதனை அறிந்த திரு த.உதயசந்திரன் அவர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு அந்த மாணவிக்கு ஒரே நாளில் மருத்துவ கலந்தாய்வுக்கு செல்வதற்கு மேற்படி பிறப்பிடச் சான்றிதழ் வழங்கி உதவும்படி கேட்டிருக்கிறார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சி.கதிரவன் அவர்களும், மாவட்ட நிர்வாகமும் ஒரே நாளில் சில மணி நேரங்களில் அந்த மாணவிக்கு புதிதாக பிறப்பிடச் சான்றிதழ் வழங்கி அந்த மாணவியின் கல்விக்கு உதவி புரிந்து இருக்கிறார்கள்.

வருவாய் வட்டாட்சியர் திருமதி.பரிமளம் அவர்கள் மதிய உணவுக்கு கூட செல்லாமல் மாலை நாலு மணிவரை இருந்து மேற்படி உதவிகளை செய்திருக்கிறார்.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)திரு ஆர் பாலாஜி அவர்களும் அவசரகால பிரிவில் பணியாற்றும் திருமிகு கோகிலவாணி அவர்களும் பாராட்டுக்கு உரியவர்கள்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய சிறப்பு என்னவென்றால் திரு உதயச்சந்திரன் ஐஏஎஸ் அவர்கள் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்தவர் அல்ல, தற்போது கல்வித்துறை அலுவலரும் அல்ல, வருவாய்த்துறை அலுவலரும் அல்ல.

மாறாக சுமார் ஓராண்டு காலம் ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக கடந்த 2007 இல் பணியாற்றியவர். அதன் பிறகு எத்தனையோ மாவட்ட ஆட்சியர்கள் வந்திருக்கிறார்கள், போயிருக்கிறார்கள்.

ஆனால் தமிழகத்திலேயே கல்விக் கடன் வழங்கியதில் அந்த ஓராண்டு காலத்தில் சாதனை படைத்திருக்கிறார். ஈரோடு மாவட்டத்தில் கல்வி உதவி என்றால் இன்றைக்கும் திரு. த. உதயசந்திரன் அய்ஏஎஸ்  அவர்கள் தான் நிலைத்து நிற்கிறார்.

தற்போதும் தமிழ்நாடு தொல்லியல் துறையின் உடைய ஆணையராக இருந்து பல முக்கியமான கீழடி ஆய்வு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் அவர் முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறார்.

இவ்வளவு பணிகளுக்கிடையில் இயங்கிக் கொண்டிருக்கிற ஊரடங்கு சூழலில் யாருக்கும் தெரியாமல் இப்படிப்பட்ட சிறு சிறு உதவிகளை எப்போதும் செய்துகொண்டுதான் இருக்கிறார்.

முகமறியா ஒருவர் உதவி கேட்டார், மாவட்ட ஆட்சியரிடம் சொல்லியாகிவிட்டது என்று விட்டுவிடாமல், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது நண்பர் ஒருவரையும்  அனுப்பி அந்த மாணவிக்கு உடனிருந்து தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு, சான்றிதழ் கிடைத்துவிட்டது என்று தகவல் வரும் வரை அவ்வப்போது இடையிடையே நிலவரத்தையும் கேட்டறிந்து உதவுவது என்பது எல்லோராலும் முடியாது...

அதிலும் தனது தந்தையார் மறைந்து நான்கைந்து நாட்களே ஆன நிலையில் அந்த சோகத்தில் இருந்து விடுபடாத ஒரு ஐஏஎஸ் அலுவலர் இப்படிப்பட்ட உதவிகளை தமிழகத்தில் செய்கிறார் என்பது தமிழர்களுக்கு கிடைத்த வரம், தவம், அறப்பயன் என்று தான் சொல்ல வேண்டும். மனித நேயத்தின் மறு பெயராக திரு. த. உதயசந்திரன் அவர்கள் திகழ்கிறார்.

தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளுக்கு ஏற்ப வாழிய நீடூழி வாழியவே என  வாழ்த்துகிறோம்....

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

  1. 🙏🙏🙏👏👏👏
    மிக்க நன்றி அய்யா. உங்களை நினைத்து பெருமை அடைகிறோம். பல்லாண்டு நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறோம் அய்யா.

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post