அதி தீவிரமாக மாறியது ‘நிவர்’ இன்று 145 கி.மீ வேகத்தில் புயல் வீசும்!
வங்கக் கடலில் உருவான ‘நிவர்’ புயல் அதி தீவிர புயலாக மாறி இன்று மாலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கிறது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். புயல் கரையைக் கடக்கும் பாதையில் உள்ள பகுதிகளில் குடிசைகள் காற்றில் அடித்துச் செல்லப்படும். மரங்கள் வேரோடு சாயும், சாலைகளில் செல்லும் வாகனங்களும் காற்றில் அடித்துச் செல்லப்படும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்தாண்டு கடந்த அக்டோபர் மாதம் தொடங்க வேண்டிய வட கிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. சுமார் 30 நாட்கள் கடந்த நிலையில், தற்போது தான் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. இருப்பினும், ஒரு காற்றழுத்தம் கூட வங்கக் கடலில் உருவாகாமல் பருவமழை குறைந்த அளவில் பெய்து வந்தது. இந்நிலையில்தான், கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரிக் கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடலை ஒட்டிய கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவானது. அது மெல்ல மெல்ல வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் நிலை கொண்டு இருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக மாறும் வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் மாலையில் அந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் புயலாக (நிவர்) மாறியது.
இந்த புயல் வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் வேகமாக நகர்ந்து வந்த நிலையில், நேற்று காலை 11.30 மணி அளவில் மணிக்கு 5 முதல் 6 கிமீ வேகமாக குறைந்து, மெல்ல நகரத் தொடங்கி சென்னைக்கு 400 கிமீ, புதுச்சேரிக்கு 350 கிமீ தூரத்தில் நிலை கொண்டது. அதற்கு பிறகு புயல் நேற்று மாலை வரை அதே இடத்தில் நிலை கொண்டு இருந்தாலும், மெல்ல நகரத் தொடங்கும் தன்மை கொண்டு இருந்தது. இந்நிலையில், அடுத்த 12 மணி நேரத்தில் இந்த புயல் தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்தது. அதன்படி நேற்று இரவு நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறியது.
அதற்கு அடுத்த நிலையில், அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று மிக தீவிரப்புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டது. தீவிரம் அடைந்த பிறகு அந்த புயல் மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோரப் பகுதிக்கு நெருங்கி வரும் என்றும், கணிக்கப்பட்டுள்ளது. இந்த வானிலை நிகழ்வின் காரணமாக நேற்று முதல் தமிழக கடலோரப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் குறிப்பாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இதையடுத்து, அனைத்து துறைமுகங்களிலும் புயல் நெருங்கி வந்துள்ளதை காட்டும் வகையில் எச்சரிக்கை கூண்டு எண் 3 முதல் 6ம் எண் கூண்டுகள் துறைமுகங்களில் ஏற்றப்பட்டன.
நேற்று இரவு புயல் தரைப் பகுதியை நோக்கி நகர்ந்தது. இன்று மாலை நிவர் புயல் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தாலும், குறிப்பாக புதுச்சேரியை ஒட்டிய நிலப்பகுதி வழியாக கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று மாலை புயல் கரையைக் கடக்க உள்ளது. அப்போது, மணிக்கு 120 கிமீ வேகம் முதல் 145 கிமீ வரை பலத்த காற்று வீசும். கடலில் சீற்றம் அதிகம் காணப்படும் என்பதால் கடல் அலைகள் 2 மீட்டர் உயரம் அளவுக்கு எழும்பும். அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் மட்டும் புயல் எச்சரிக்கை கூண்டு 7ம் எண்ணும், சென்னை, நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் 6ம் எண் கூண்டும், காரைக்காலில் 5ம் எண் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளன. இது தவிர, உள்ளூர் எச்சரிக்கைக்காக பாம்பன், தூத்துக்குடி, ராமேஸ்வரம், குளச்சல் துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு 3 ஏற்றப்பட்டுள்ளன. புயல் கரையை கடக்கும்போது காற்று வேகமாக வீசும் என்று கூறுவதால் ஆபத்தை தவிர்க்க பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழக அரசு பொது விடுமுறையை அறிவித்துள்ளது.
அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் இயங்காது என்று அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசியப் பணிகளுக்கான அலுவலகங்கள் மட்டும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழை: மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிக மிக கன மழை பெய்யும்.
பாதிப்புகள்: நிவர் புயல் கரையைக் கடக்கும் போது, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் காரைக்கால், புதுச்சேரியிலும் குடிசை வீடுகளின் கூரைகள், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ஷெட்களின் மேற்கூறைகள், தகடுகள், ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் காற்றில் அடித்துச் செல்லப்படும்.
பழைய வீடுகளும் இடிந்து விழும். மின்சாரக் கம்பங்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள், கம்பங்கள், சாய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதேபோன்ற பாதிப்புகள் திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, புயல் பாதிப்பு அதிகம் ஏற்படும் இடங்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ள பகுதிகளில் அரசு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பிலும், வருவாய்த்துறை சார்பிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. புயலில் இருந்து மக்களை மீட்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment