Title of the document
அழிவின் விளிம்பில் இருக்கும் ஆலயங்களையும், நிலங்களையும் மீட்டெடுக்க வேண்டும்


இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் தற்போது 38,635 கோவில்கள் உள்ளன. இவற்றில் திருக் கோவில்கள் 36,595. திருமடங்கள் 56. திருமடத்துடன் இணைந்த திருக்கோவில்கள் 57.   அறக்கட்டளைகள் 1,910  உள்ளதாக கருதுகிறோம். அரசியல்சாஸனத்தைப் பொறுத்தவரை, சமணர்களும் இந்துக்கள் என்பதால், சமணக் கோவில்களையும் இந்து சமய அறநிலையத் துறையே நிர்வகிக்கிறது. அப்படி 17 சமணக் கோவில்கள் இந்தத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மொத்தமாக 38,635 திருக்கோவில்கள் பட்டியலில் உள்ளன.
பட்டியலில் இல்லாத திருக்கோயில்களும் நிறைய உள்ளன. பொதுவாக திருக்கோவில்கள் வருமானத்தின் அடிப்படையில் சில பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 தமிழக அரசு இந்துசமய அறநிலைய துறை சார்பாக  ஆணையர்,
கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், தனி அலுவலர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள்,  முதுநிலை, வரை நிலை அலுவலர்கள், கணக்கு அலுவலர்கள், தணிக்கை அலுவலர், துணை இயக்குனர் என உள்ளனர்.
திருக்கோவில்களின் ஊழியர்கள் தனியாகவும் உள்ளனர்
 கோவிலின் நிர்வாக அதிகாரிகள், அறங்காவலர்கள், பாதுகாவலர்கள், ஊழியர்கள் என பலர் இருந்தும் திருக்கோவில்களை பராமரிப்பதையும், புனிதத்தையும் காக்க தவறி வருகிறார்கள். 
திருக் கோவில்கள் நல்ல முறையில் செயல்பட சங்க காலம் முதல் தற்காலம் வரை  மன்னர்களும், ஆட்சியாளர்களும், பொதுமக்களும் திருக்கோவில்களுக்கு நிலங்களையும், செல்வங்களையும் ஏராளமாக கொடுத்துள்ளனர். 
 தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கோவில்கள், நுாற்றாண்டுகளை கடந்தவையாக உள்ளன.   
பாரம்பரியம், கலை, கட்டிடச் சிறப்பு,  உள்ளிட்ட பெருமை திருக்கோவில்களுக்கு உண்டு. 
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோவில்களையும்,திருக்கோவில் சார்ந்த இடங்களையும் சரிவர பாதுகாக்காமல் உள்ளார்கள். இதனால் பல திருக்கோவில்கள் சிதிலமடைந்து வருகின்றன.
வரலாற்றுச் சிறப்புமிக்க தொன்மைமிக்க திருக்கோவில்கள் மரபு மாறாமல் திருக்கோவில் நிர்வாகக் குழு நிர்வாகிகள் கட்டுமானத் துறை, வேதியியல் பொறியாளர்கள், மரபுக் கட்டடக்கலை உள்ளிட்ட வல்லுனர்களின் பரிந்துரைப்படி, பழமை மாறாமல் புதுப்பிக்கவேண்டும். மேலும், வரலாறு, பண்பாடு, பழமை, கல்வெட்டு எழுத்துக்களின் முக்கியத்துவத்தினை உலகறிய செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 திருக்கோவில்களின் ஏராளமான அசையாச் சொத்துக்களை கண்காணித்து, பாதுகாக்க வேண்டும்.
தற்போது தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களின் பல கட்டுமானங்களும், புராதனமான சிலைகளும் சிதைந்து உள்ளது.
திருக்கோவில்களில் ஓவியக்கலையினை சிதைக்கும் வண்ணம் நவீன கால வண்ணங்களை பூசியும்,நவீன மின் சாதனங்களை பொருத்தியும் உள்ளனர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த சோழர் காலம், அதன்பின் வந்த நாயக்கர், மராட்டியர் கால ஓவியங்கள் கூட, மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், இன்னும் சிறப்பாக பராமரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. திருக்கோவில்களில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த  கல்வெட்டை பாதுகாக்க வேண்டும்.
 அதேநேரம், கோவில்களின் நிலத்திற்கு பலர் குத்தகை என்ற அடிப்படையில் மிகச் சொற்ப பணங்களை வழங்கி வருகின்றார்கள். ஆக்கிரமிப்பு பிடியில் உள்ள திருக்கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் திருச்சிராப்பள்ளி மாவட்ட துணைத் தலைவரும், ருத்ரசாந்தி யோகாலயம் குருஜியுமான கிருஷ்ணகுமார் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post