Title of the document

 ‘அறம் 2020' என்ற ஐந்து நாள் இணையவழிப் பயிற்சி வகுப்புகளை 'இந்து தமிழ் திசை' நாளிதழ், கல்வியாளர்கள் சங்கமம், முதலுலகின் மூத்தகுடி, கோவை கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி ஆகியவை இணைந்து ஒருங்கிணைத்திருந்தன. ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பில், ஆசிரியர்கள், மாணவர்கள், இந்து தமிழ் திசை வாசகர்கள் என முந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அன்றாடம் கலந்துகொண்டார்கள். பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட பேச்சாளர்களுடைய உரையின் சுருக்கமான தொகுப்பு.

  மனிதம் போற்றுவோம்

l முனைவர். சொ. சுப்பையா,

 மனிதம் என்பது மனிதர்களிடம் இயல்பாக இருக்க வேண்டிய விஷயம். ஆனால், இப்போது மனிதத்தன்மை இல்லாமல் மனிதர்கள் இருக்கிறார்கள். அதுதான் நம்மை மனிதத்தைப் போற்றுவதைப் பற்றிப் பேசவைத்துள்ளது. நிர்க்கதியாக நிற்பவர்களுக்கு உதவுவதுதான் மனிதம். எந்த ஒரு உயிருக்கும் நம்மால் விலை நிர்ணயிக்க முடியாது. இப்போது எங்கும் சுயநலம் நிறைந்திருக்கிறது. முதியவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். முதியவர்களுக்கும் எளிய மனிதர்களுக்கும் நாம் ஆறுதலாக இருக்க வேண்டும். சம்பாதிப்பதில் ஒரு சதவீதத்தையாவது வயதானவர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் உதவுவதற்குப் பயன்படுத்த வேண்டும். வாழ்க்கை என்பது அடுத்தவர்களுக்கு உதவுவதற்கும் அன்புகாட்டுவதற்கும்தான். பெற்றோர்களும் ஆசிரியர்களும்தாம் மனிதம் பற்றி இந்தத் தலைமுறைக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். அவர்களுடைய செயல்பாடுகள் வழியாகவே இன்றைய தலைமுறையினர் மனிதத்தைக் கற்றுக்கொள்ள முடியும்.

ஊடக அறம்

l மருது அழகுராஜ்,

ஊடகவியலாளர் ஒரு காலத்தில், சமூகத்துக்கான தொண்டு ஊழியமாக நினைத்து நடத்தப்பட்டுவந்த பத்திரிகைகள், இப்போது முழு வணிக மோகத்துக்கு அடிமையாகியுள்ளன. ஊடக உரிமையாளர்களின் தரத்தைப் பொறுத்தே ஊடகங்களின் அறம் தீர்மானிக்கப்படுகிறது. ஊடக அறம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருகிறது. ஒரு காலத்தில், ஊடகங்களில் வன்மம் நிறைந்த காட்சிகளைக் காட்ட மாட்டார்கள். இளைய தலைமுறையினரிடம் வன்மம் பரவிவிடும் என்பதால் ஊடகங்கள் வன்முறைச் செய்திகளை எச்சரிகையுடன் கையாண்டன. ஆனால், இன்றையச் சூழல் அப்படியில்லை. உண்மையைச் சொல்வது மட்டுமல்ல; உகந்ததைச் சொல்ல வேண்டும் என்பதுதான் ஊடக அறம். ஆனால், இன்று நீதித்துறைக்கு முன்னரே குற்ற வழக்குகளில் தீர்ப்பளிக்கும் பணியை ஊடகங்கள் செய்கின்றன. செய்திகளை முந்தித் தருகிறோம் என்ற பெயரில், அறம் என்பதை ஊடகங்கள் முற்றிலும் கேள்விக்குறியாக்கி இருக்கின்றன. தனிமனித அறம், சீர்குலைந்துபோயிருக்கும் இந்தச் சூழலில், ஊடக அறத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு வாசகர்களுக்கு அதிகமாக இருக்கிறது. அறம் சார்ந்த வாசகர்கள் நினைத்தால், நிச்சயம் அறம்சார்ந்த ஊடகங்கள் உருவாகும். தமிழுக்கு அறமென்று பெயர்

l பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்,

 அறம் என்ற சொல்லுக்கு இரண்டு பொருள்கள் இருக்கின்றன. ‘தர்மம்’ என்ற வடசொல்லுக்குத் தமிழில் இணையான சொல் அறம். மற்றொரு பொருள், ‘அறம் பாடுதல்’ என்ற வழக்கம். கொடுமையாளர்களைக் கடுமையான சொற்களில் சொல்வதை அறம் பாடுதல் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன. உலகின் ஆறு செம்மொழிகளில், தமிழ் இன்றளவும் பேச்சு மொழியாக இருப்பது சாதாரண விஷயம் அல்ல. தமிழ் மொழி பக்தி மொழி. ஏனென்றால், ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைத்த நூல்களில் பக்திச் சுவைதான் நிறைந்திருந்தது. பக்தி மொழியாக இருப்பதோடு, தமிழ் நீதிமொழியாகவும் இருக்கிறது.

 மனிதனை மனிதனாக்குவதுதான் அறம். மனிதன் மனிதனைக் கண்டுதான் அஞ்சுகிறான். அவன் இன்னும் முழுமையான மனிதத்தன்மைக்கு வரவில்லை என்பதைத்தான் அது காட்டுகிறது. அக வாழ்க்கை, புற வாழ்க்கை என இரண்டுக்குமான அறத்தைச் சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. கொடை, புகழ், போர், வாழ்க்கை, ஏன் காதலுக்கும்கூட அறம் இருக்கிறது. அனைத்துத் தரப்பினருக்கான அறமும் தமிழ்ச் சங்க இலக்கியங்களில் விளக்கப்பட்டுள்ளன. ஆசிரியர், மாணவர்களுக்கான அறத்தை நன்னூல் விளக்கியுள்ளது.

மனித வாழ்வில் அறிவியல்

l டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, அறிவியல் அறிஞர், மங்கள்யான் திட்ட இயக்குநர்

 இயல், இசை, நாடகம் என முத்தமிழைக் கொண்டிருப்பதைப் போல, நான்காம் தமிழாக அறிவியல் தமிழ் வரவேண்டும். மனிதன், ஏன், எப்படி, எதனால் எனக் கேட்டதன் விளைவால் உருவானதே அறிவியல். அறிவியலையும், அறிவியல் மனப்பாங்கையும் அறிவியல் கற்பவர்கள் அறம்சார்ந்த அடிப்படையில் முன்னெடுத்துச்செல்ல வேண்டும். விவசாயம் முதல் விண்வெளிவரை அறிவியல் செயல்படுகிறது.

ஆனால், அறிவியலைச் சாமானியர்களிடம் கொண்டுசேர்ப்பதில் சமநிலை என்ற அறம் இல்லாமல் போகிறது. மனிதனை விலங்கிலிருந்து மாறுபடுத்தியது அறிவியல்தான். இந்தப் பெருந்தொற்றுக் காலத்திலும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இருக்கிறது. பல கொள்ளை நோய்கள், போர்கள் ஆகியவற்றின் இழப்புகளைத் தாண்டி மனிதன் வளர்ந்துவந்திருக்கிறான். அதற்கு, அறிவியல் மனிதனுக்கு உதவியிருக்கிறது. விண்வெளியில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் அறிவியல் வளர்ச்சி சீராக இருக்க வேண்டும்.

மக்கள்தொகை உலக அளவில் அதிகரித்துள்ளது. முன்பைவிட ஒன்றரை மடங்கு கூடுதலாக உணவுப் பொருட்களை நாம் உற்பத்திசெய்கிறோம். ஆனால், மக்கள் பசியால் வாடுவதை நம்மால் தடுக்க முடியவில்லை. அறிவியலும் அறமும் விவசாயத்தில் இணையும்போது, இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும். அறம்சார்ந்த வாழ்வுக்கு, அறிவியலால் சமுதாயமும், சமுதாயத்தால் அறிவியலும் வளரட்டும். உங்களால் மட்டுமே முடியும்

l சிகரம் சதீஷ்குமார், எழுத்தாளர், ஆசிரியர்

ஒரு தனிமனிதனால் என்ன செய்துவிட முடியும் என்று யோசிக்கத் தேவையில்லை. ஒரு தனிமனிதன் நினைத்தால் உலகத்தையே மாற்ற முடியும். ஒரு மனிதன் எதையும் எதிர்பார்க்காமல் நேர்மையாகச் செயல்படும்போது, அதற்கான அங்கீகாரம் அவனுக்குத் தானாகக் கிடைக்கும். இன்றைய சூழலில் நாம் விவசாயிகளின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். உலகத்திலேயே ஆகச்சிறந்த கொடையாளன் விவசாயிதான். விவசாயி உற்பத்தியை நிறுத்திவிட்டால், நாம் உயிர்வாழ முடியாது. இந்த இக்கட்டான கரோனா காலத்தில், விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. விவசாயிகளின் முக்கியத்துவத்தை இந்தத் தலைமுறை மாணவர்களுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும். விஞ்ஞானிகளுக்குக் கொடுக்கும் மரியாதையை நாம் விவசாயிகளுக்கும் கொடுக்க வேண்டும். எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொடுப்பதைவிட, மாணவர்களுக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுப்பதுதான் முக்கியம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post