Title of the document
 பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடப் பிரிவு - பள்ளிகள், மாணவர்கள் குழப்பம்

இந்த கல்வி ஆண்டில் பிளஸ் 1 படிக்க உள்ள மாணவர்களுக்கு புதிய பாடப்பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் வேதியியல் பாடம் நீக்கப்பட்டுள்ளதால் அந்த பாடப்பிரிவு எடுக்கும் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது மாணவர்கள், பள்ளிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.


தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்பில் 5 பாடங்கள் கொண்ட பாடப் பிரிவுகள்(குரூப்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அறிவியல் பாடத் தொகுப்பில் 4 புதிய குரூப்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மொழிப் பாடங்கள் 2 தவிர பகுதி 3ன் கீழ் முதல் குரூப்பில்- கணக்கு, இயற்பியல், வேதியியல், இரண்டாம் குரூப்பில்-இயற்பியல், வேதியியல், உயிரியல், மூன்றாம் குரூப்பில்-கணக்கு, இயற்பியல், கணினி அறிவியல், நான்காவது குரூப்பில்- வேதியியல், உயிரியல், மனையியல் ஆகிய பாடங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த குரூப்களில் எதை தேர்வு செய்வது என்ற குழப்பம் தற்போது மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், எந்த குரூப்களை எடுத்து நடத்தினால் அதிக அளவில் மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சேர்க்க முடியும் என்ற குழப்பமும் பள்ளி நிர்வாகங்களுக்கு வந்துள்ளது. 


பிளஸ் 2 படிப்பு முடித்த பிறகு பொறியியல் பட்டம் பெற விரும்பும் மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பில் சேரும் போதே இயற்பியல், கணக்கு, வேதியியல், உயிரியல் பாடப் பிரிவுகளையோ அல்லது கணக்கு, இயற்பியல், கணினி அறிவியல், வேதியியல் பாடங்களையோ கொண்ட குரூப்பைத் தான் தேர்வு செய்வார்கள். தற்போது 500 மதிப்பெண்களுக்கு ஏற்ப பாடங்களும் 6ல் இருந்து 5ஆக குறைக்கப்பட்டுவிட்டன. அதன்படி, புதிய தாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள குரூப்களில்3 மற்றும் 4வது குரூப்களில் பொறியியல் படிப்புக்கான பாடங்கள் சிலவிடுபட்டுள்ளன என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

 பெரும்பாலும் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் கணினி அறிவியல் உள்ள குரூப்பைத்தான் தேர்வு செய்வார்கள். ஆனால் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள கணினி அறிவியல் குரூப்பில் வேதியியல் பாடம் சேர்க்கப்படாமல் உள்ளதால் அந்த குரூப் எடுத்து படிப்போர் பொறியியல் படிப்பில்சேர முடியாது. 6 பாடங்கள் கொண்ட குரூப்களை 5 பாடங்கள் கொண்ட குரூப்களாக மாநில அரசு மாற்றம் செய்துவிட்டதால், மன அழுத்தம் குறைந்துள்ளது. ஆனால் உயிரியல் குரூப்பில் கணக்கு இல்லை, வணிகவியல் குரூப்பில் பொருளியல் சேர்க்கப்படவில்லை.


இதனால் இந்த குரூப்களை எடுத்து படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள முடியாது என்றும் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள குரூப்களில் கணக்கு, இயற்பியல், கணினி அறிவியல் பாடங்களை கொண்ட குரூப் எடுத்துப்படிப்போருக்கு சிறிய அளவில் எதிர்கால வாய்ப்புள்ளது. ஆனால் இப்போதுள்ளபடி, பொறியியல், பிஎஸ்சி இயற்பியல் பட்டப்படிப்பு, அல்லது கணக்கு படிப்புகளில் சேர வேண்டும் என்றால் அவற்றில் வேதியியல் துணைப்பாடமாக இருப்பதால் வேதியியல் பாடம் படிக்காமல்சேர முடியாது. பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் வேதியியல் படித்திருக்க வேண்டும்.


அதனால் ஏற்கெனவே இருந்தபடி முக்கியமான நான்கு பாடங்களும் உள்ள குரூப்களை அரசு மீண்டும் வைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதே போல உயிரியல் குரூப் எடுத்து படிக்கும் மாணவர்கள் கணக்குப் பாடத்தையும் சேர்த்து படிக்கவில்லை என்றால், அவர்களால் நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறமுடியாது. காரணம் அந்த தேர்வுகளிலும் சில கணக்குகள் மூலம் தீர்வு காண வேண்டிய கேள்விகள் இடம் பெறுகின்றன. அதனால் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள குரூப்களை மாணவர்கள் எடுத்துப் படித்தால் போட்டித் தேர்வுகளில் தேற முடியாது.


மேலும், வணிகவியல் பாடப்பிரிவுகளில் பொருளியல் பாடம் நீக்கப்பட்டுள்ளது. இது அந்த குரூப்புக்கு அவசியமான பாடம். பட்டயக்கணக்காயர், CWA போன்ற படிப்புகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு வணிக கணிதம் முக்கியமான பாடமாக இருக்கிறது. ஆனால்புதிய குரூப்பில் மேற்கண்ட இரண்டுபாடங்களும் மாற்றி வைக்கப்பட்டுள்ளன. அதனால் திரும்பவும் ஏற்கெனவே இருந்தபடி பாடங்களை அந்தந்த குரூப்களில் வைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post