Title of the document
கொரோனா தொடர்பான செய்திகளால் மனம் தளரவேண்டாம்; 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவுரை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15ம்தேதி தொடங்குகிறது. தேர்வை மாணவர்கள் அச்சமின்றி எதிர்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து நெல்லை டவுன் ஜவஹர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை மாலா கூறியதாவது: தமிழகத்தில் வரும் 15ம்தேதி அன்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்குகிறது.

பள்ளிக் கல்வித்துறை அதற்கான ஏற்பாடுகளில் முழுமுனைப்புடன் ஈடுபட்டுள்ளது. பெற்றோர், ஆசிரியர், மாணவர்களின், ஒரு வருட ஒட்டு மொத்தத் திட்டமிடல்களையும் மீட்டெடுக்க வேண்டிய சவலான நேரமிது. மாணவர்கள் புறச்சூழல்களைப் புரிந்து கொண்டு மனதளவில் தயாராகுங்கள். 12 ஆயிரம் பள்ளிகளும் தேர்வு மையங்கள் ஆகின்றன.

உங்கள் பள்ளியில்தான் நீங்கள் தேர்வு எழுதப் போகிறீர்கள். பயமோ, பதட்டமோ தேவையில்லை. படித்தவை மறந்துபோக அதுவே காரணமாகிவிடும். உளவியல் நெருக்கடிகளை ஓரம் கட்டிவிட்டு மனதை ஒருமுகப்படுத்தி தேர்வுகளுக்கு தயாராகுங்கள். தோல்வி பயம் எள்ளளவும் தேவையில்லை.

தேர்வு மையத்துக்கு வந்து தேர்வுகளை எழுதி விட்டுப் சென்றாலே வெற்றிதான். இந்த ஒரு வாரமும் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள். தனிமையில் அமருங்கள். நீங்கள் கற்ற பாடங்களை குறிப்பெடுத்து மன வரைபடம் போட்டு திருப்புதல் செய்யுங்கள். எழுதி, எழுதிப் பாருங்கள் அதுஒரு பயிற்சி. கணித தேர்வு தற்போது மொழிப் பாட தேர்வுகளை அடுத்து வருகிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

வினாத்தாளை பெற்றதும் அவை உங்களுக்கான பழைய, புதிய பாட திட்டத்தில் உள்ளதுதானா? என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். முதன்மை விடைத்தாளில் மொழிப்பாடங்களில் தேவையான படிவங்களில் கணிதத்தில் உள்ள வரைகட்டதாள் (கிராப்ட்), சமூக அறிவியலில் நாட்டு வரைபடங்கள்(மேப்) அச்சிடப்பட்டுள்ளதா? என சரிபார்க்கவும். கணிதத்தை பொறுத்தவரை சற்று பின்தங்கிய மாணவர்கள் புத்தகம் பின்புறம் உள்ள ஒரு மதிப்பெண் வினா விடைகளை தினமும் தவறாமல் படிப்பது நல்ல பலன் தரும், எல்லா பாடங்களையும் தெரிவு விடை வினாக்களை மீண்டும் மீண்டும் படியுங்கள்.


தேர்வு எழுத 3 மணி நேரம் கொடுக்கப்படுகிறது. இதனை முழுவதும் பயன்படுத்தி கொள்ளுங்கள். தேர்வு எழுத உங்களுக்கு தேவையான பொருட்களை நீங்களே கொண்டு செல்லுங்கள். தெரியாததை பற்றிய அச்சத்தை விட்டுவிட்டு தெரிந்த விடைகளை நேர்த்தியாக எழுதுவதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். 30 நிமிடத்திற்கு முன்னதாக தேர்வு மையத்திற்கு சென்றுவிடுங்கள். நண்பர்களை பார்த்ததும் பரவசம் ஆவது, கை குலுக்குவது, கதை பேசுவது, கலந்து விவாதிப்பது, தேர்வு முடிந்தபின்னர் நீ என்ன எழுதி இருக்கிறாய்? இது சரிதானா? என்று விசாரிப்பது போன்றவற்றை தவிர்த்துவிடுங்கள்,

இடைவெளி, முக கவசம் எப்போதும் கவனத்தில் இருக்க வேண்டியவை. இதுவும் ஒரு தவம்தான், பொறுப்பான பிள்ளையாய் இருங்கள். அஞ்சுவது அஞ்சாமையும் பேதமைதான். எனவே அசட்டு துணிச்சல் வேண்டாம். உடல்நல குறைபாடு இருந்தால் உடனடியாக பெற்றோரிடம் தெரிவித்துவிடுங்கள்.

அரசு பலவிதமான ஏற்பாடுகளை செய்திருந்தாலும் பெற்றோரும் பிள்ளைகளும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இந்த தேர்வு யதார்த்தத்தை நீங்கள் புரிந்துகொண்டு செயல்படுவதை உறுதிசெய்வதற்கானது. கொரோனா தொடர்பான செய்திகளால் மனம்தளராமல் இருங்கள்.

சரியான அணுகு முறையுடன் தேர்வை அணுகுங்கள். மனதை இலகுவாக்கிக்கொண்டு தயாராகுங்கள் என்றும் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இந்த பொதுத்தேர்வு உங்களுக்கு சிறப்பான வெற்றியைதர வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.a
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post