Title of the document
10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்யுங்கள் என தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை விடுத்துள்ளது.

கல்வியாளர்கள் சங்கமத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.சதிஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது

உலகம் முழுவதும் கரோனா தொற்றுநோய் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சத்தினால் ஊரடங்கு அமல் செய்யப் பட்டுள்ள நிலையில், நமது இந்திய தேசத்திலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டு, சிறப்பான திட்டமிடல் மற்றும் வழிகாட்டல்களால் தமிழகத்தைப் பாதுகாத்தீர்கள்.

இதுவரை சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நாம் தற்போது சற்று அசாதாரண நடவடிக்கைகளுக்குத் துணிந்துவிட்டோமோ என்னும் பேரச்சம் ஏற்படுகின்றது.

சிறப்பான, அதே நேரத்தில் தேவையான நடவடிக்கைகள் மூலம், மக்கள் பாதுகாப்பில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்த வந்த தமிழக அரசு தொடர்ந்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே இந்த நேரத்தில் கோரிக்கையாக வைக்கின்றேன்.

பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் ஆகியோருடைய நலன்களைக் கருதி மக்கள் பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் திறப்பை நாடு முழுவதும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தள்ளி வைத்துள்ள சூழலில், இன்னும் ஊரடங்கு முழுமையாக விலக்கிக்கொள்ளப்படாமல் இருக்கும்பொழுது, தொற்றுநோய் சமூகப்பரவலாக அதிகரித்துக்கொண்டிருக்கும் இக்கட்டான காலகட்டத்தில் நடத்த முன்வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது.

பஞ்சாப் மாநிலத்தில் இன்றைய தேதிக்கு கரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை வெறும் மூவாயிரத்திற்குக் கீழ்தான், பஞ்சாப் அரசு 10 ம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்துசெய்து, முன் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சி அறிவிக்கப்படும் என அறிவித்துவிட்டார்கள். ஆனால் இன்றைய தேதிக்கு நாம் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றைக் கடந்து, இன்னும் வேகமாகப் பரவுகின்ற சூழலில் இருக்கும் நாம் 10- ம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்த துணிந்திருக்கின்றோம்.
எந்த சூழலிலும் 10 லட்சம் மாணவர்களின் உயிரைப் பணயம் வைத்துவிடக்கூடாது என்பதே எமது கோரிக்கை.

சாதாரண குடிமகனாக எங்களுக்கு இருக்கும் இந்த அக்கறை, நிச்சயமாக ஒரு மாநிலத்தின் நிர்வாகியாக உங்களுக்கு மிக அதிகமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

எனவே இதுகுறித்து உரிய ஆலோசனை செய்து, தக்கமுடிவு எடுக்கும்படி தமிழக முதல்வர் அவர்களுக்கு பணிவுடன் கோரிக்கை வைக்கின்றேன்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி...
இந்து தமிழ்திசை
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post