Title of the document
சென்னை: ''ரேஷன் கடைகளில், அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும், ஜூன் மாதமும் இலவசமாக அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் வழங்கப்படும். அரசின் அறிவிப்புகளை முறையாக மக்கள் பின்பற்றினால், கொரோனா பரவலை தடுக்க முடியும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்தார்.சென்னையில், நோய் பரவலை கட்டுப்படுத்த, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மாநகராட்சி அலுவலகத்தில், அதிகாரிகளுடன், முதல்வர் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்பின், வீடியோ வாயிலாக, முதல்வர் கூறியதாவது: சென்னையில், கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, மண்டல வாரியாக, நோய் தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மாநகராட்சி தலைமையிடத்தில், மக்கள் பிரச்னைகளை அறிந்து கொள்ள, கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டுள்ளது.குறுகலான தெருவில், அதிக மக்கள் வசிப்பதே, நோய் வேகமாக பரவ காரணம். இதனால், ஒருவரிடம் இருந்து, மற்றவருக்கு எளிதாக நோய் பரவுகிறது. சென்னையில் மட்டும், 4,000 படுக்கை வசதி உடைய மருத்துவமனை, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நோயை கட்டுப்படுத்த, நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்க, சிங்க், வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர், நிலவேம்பு கஷாயம் வழங்கப்படுகின்றன.மாநிலம் முழுதும் உள்ள, 50 பரிசோதனை மையங்களில், தினமும், 12 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. இதனால், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; மக்கள் அச்சப்பட தேவையில்லை.

சில தொழில்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. வெளி மாநில தொழிலாளர்கள் விருப்பம் இருந்தால், இங்கேயே இருக்கலாம். சொந்த ஊர் செல்ல விரும்பினால், தகுந்த ஏற்பாடு செய்யப்படும்.தமிழகத்தில், 50 ஆயிரம் வெளி மாநில தொழிலாளர்கள் உள்ளனர். எந்த மாநிலத்திற்கு, எந்த தேதியில், ரயில் இயக்கப்படும் என்ற விபரம் அறிவிக்கப்படும்.

அதுவரை யாரும் வெளியில் வர வேண்டியதில்லை. அனைவரையும், ஒரே நாளில் அழைத்து செல்ல முடியாது. ஒரு மாதத்திற்குள், படிப்படியாக சொந்த மாநிலத்திற்கு, அழைத்து செல்லப்படுவர்.மக்களுக்கு தேவையான வசதிகளை, அரசு செய்து கொடுத்து வருகிறது. பொதுமக்கள் வெளியில் செல்லும் போது, கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.

அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். பொருட்கள் வாங்கும் போது, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இவற்றை பின்பற்றினால், நோய் பரவலை தடுக்க முடியும்.பொதுமக்களுக்கு, இலவச அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், 1,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மே மற்றும் ஜூன் மாதமும், அரிசி ரேஷன் கார்டு தாரர்களுக்கு, அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு, முதல்வர் கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post