அடுத்த வேலையை பார்ப்போம்! நீட், ஜே.இ.இ., நுழைவு தேர்வு தேதி அறிவிப்பு

Join Our KalviNews Telegram Group - Click Here
சென்னை: கொரோனா ஒழிப்பு போர், ஒரு பக்கம் நடந்து வந்தாலும், அடுத்த வேலையையும் பார்ப்போம் என்ற முடிவுக்கு, மத்திய, மாநில அரசுகள் வந்து விட்டதாக தெரிகிறது. அதன் வெளிப்பாடாக, மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வை, ஜூலை, 26ல் நடத்தப் போவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஐ.ஐ.டி., போன்ற, உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் சேருவதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையில், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து, இடம்பெயர தயாராகும், வெளிநாட்டு நிறுவன முதலீடுகளை, இந்தியாவுக்கு ஈர்க்கும் முயற்சிகளும் துவங்கி உள்ளன. இந்த சூழலில், சாதாரண சளி, காய்ச்சல், இருமல் போன்ற, கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு, வீடுகளிலேயே சிகிச்சை அளிக்க, தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஜே.இ.இ., 'நீட்' தேர்வுகள்:பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற வேண்டும். சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளில் சேரவும், இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். நீட் நுழைவு தேர்வு, மே, 3ம் தேதி நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஊரடங்கால், இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.இந்திய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி.,க்களில் சேரவும், ஜே.இ.இ., என்ற நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

ஜே.இ.இ., நுழைவு தேர்வு, இந்தாண்டு, ஏப்., 4 முதல் நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால், கொரோனா பிரச்னையால், தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது .தேர்வு எப்போது நடத்தப்படும் என, மாணவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இது குறித்த அறிவிப்பை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாந்த், நேற்று வெளியிட்டார். தேர்வுகள் தொடர்பான குழப்பங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், அவர் நேற்று மாணவர்களுடன், 'ஆன்லைன்' வழியாக கலந்துரையாடல் நடத்தினார். இந்த உரையாடலில், நாடு முழுதும் உள்ள மாணவர்கள் பங்கேற்றனர்.

மாணவர்களின் சந்தேகங்களுக்கு, அவர் தெளிவான விளக்கம் அளித்தார். அப்போது, தேர்வுக்கான தேதிகளையும் அவர் அறிவித்தார்.அவர் கூறியதாவது: நீட் நுழைவு தேர்வு, ஜூலை, 26ல் நடத்தப்படும். ஐ.ஐ.டி.,க்களுக்கான, ஜே.இ.இ., முதன்மை தேர்வு, ஜூலை, 18ல் துவங்கும்; அம்மாதம், 18, 20, 21, 22, 23ம் தேதிகளில் தேர்வு நடத்தப்படும். ஜே.இ.இ., முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கான, 'அட்வான்ஸ்டு' தேர்வு தேதி, பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

இந்த அறிவிப்பால், மாணவர்களின் குழப்பம் தீர்ந்துள்ளது. தேர்வுக்கு இன்னும், இரண்டு மாதங்களுக்கு மேல் உள்ளதால், அதிக மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள் பயிற்சி பெற, போதிய அவகாசம் கிடைத்துள்ளது.வெளிநாட்டு முதலீடுகள் இழுப்பு:சீனாவில், கொரோனா தாக்குதலால் திணறி போயுள்ள, பல்வேறு நிறுவனங்கள், அங்கிருந்து, வேறு நாடுகளுக்கு மாற முடிவு செய்துள்ளன. பல்வேறு சலுகைகளை கொடுத்து, அந்த நிறுவனங்களை, இந்தியாவுக்கு இழுத்து வர, மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு உள்ளது. இதற்காக, ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க் நகரின் நில அளவை விட, இரண்டு மடங்கு அதிகமான நிலங்கள், இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.உலக வங்கி தகவலின்படி, லக்சம்பர்க் நகர நிலப்பரப்பின் அளவு, 6 லட்சத்து, 466 ஏக்கர்.

இந்தியாவில், அதை விட, இரண்டு மடங்காக, 11 லட்சத்து, 40 ஆயிரத்து, 611 ஏக்கர் நிலங்கள், தொழில் நிறுவனங்களுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில், தமிழகம், குஜராத், மஹாராஷ்டிரா, ஆந்திர மாநிலங்களில் மட்டும், தொழில் துறைக்கு சொந்தமான, 2.84 லட்சம் ஏக்கர் நிலங்கள் தயாராக உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.தமிழகத்தில் குழு:தமிழகத்தில், ஏற்கனவே முதலீடு செய்துள்ள நிறுவனங்கள், அவற்றின் பிற நாடுகளில் உள்ள தொழில் முதலீடுகளை மாற்றும் முடிவில் உள்ளன. அத்தகைய நிறுவனங்களை, தமிழகத்திற்கு வர வைப்பதற்காக, தலைமை செயலர் சண்முகம் தலைமையில் சிறப்பு குழுவை, தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்தக் குழுவில், ஜப்பான், தென்கொரியா, தைவான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த, தொழில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், நிதித் துறைச் செயலர், பெருந்தொழில், சிறு தொழில் நிறுவன செயலர்கள், வணிக வரி கமிஷனர் உள்ளிட்டோரும் உள்ளனர். இதனால், மத்திய, மாநில அரசுகளின் முயற்சிக்கு, நல்ல பலன் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வீட்டிலேயே கொரோனா சிகிச்சை:'தமிழகத்தில், சாதாரண கொரோனா அறிகுறி இருப்பவர்கள், வீட்டில் இருந்தே சிகிச்சை பெறலாம்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில், கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சென்னை, கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ஏற்பட்ட தொற்று காரணமாக, கடலுார், விழுப்புரம், அரியலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், பாதிப்பு பல மடங்கு அதிகரித்து உள்ளது. அந்த மாவட்டங்களில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, தலா, 100ஐ தாண்டியுள்ளது.

இதற்கிடையே, சென்னையிலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு, நந்தம்பாக்கம் வர்த்தக மையம்; ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு, அரும்பாக்கம் தனியார் கல்லுாரி; கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு, கிண்டியில் உள்ள கல்லுாரி ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த கல்லுாரிகளில், 45 வயதுக்கு உட்பட்ட, ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் இல்லாத, கொரோனா நோயாளிகள் இடமாற்றம் செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் அறிகுறி உள்ளவர்கள், தொடர்ந்து அதிகரித்து வருவதால், சாதாரண அறிகுறி இருப்பவர்கள், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெறலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.யார் யாருக்கு வீடுகளில் சிகிச்சை?

சுகாதாரத் துறை செயலர், பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள உத்தரவு:* சாதாரண சளி, காய்ச்சல் போன்ற, கொரோனா அறிகுறி தென்படுவோர், வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெறலாம். இதற்கு, கழிப்பறை வசதியுடன் கூடிய தனி அறை இருக்க வேண்டும்* பாதிப்பு இருப்பவர்களை, 24 மணி நேரமும் கண்காணிக்க, ஒருவர் இருக்க வேண்டும்* வீட்டில், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் மற்றும் கண்காணித்து கொள்பவர்கள், டாக்டரின் ஆலோசனைப்படி, 'ஹைட்ராக்ஸி குளோரோக்வின்' மாத்திரை உட்கொள்ள வேண்டும்* தனிமைப்படுத்தப்பட்டுஉள்ளவர்கள் மற்றும் உடன் இருப்பவர்கள், 'ஜிங்க்' மாத்திரை, 20 மில்லி கிராம்; 'விட்டமின் சி' 100 மில்லி கிராம் என, 10 நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும்* அத்துடன், நிலவேம்பு, கபசுர குடிநீர் பருக வேண்டும். 5 கிராம் பொடியை, 240 மில்லி லிட்டர் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து, 60 மில்லி லிட்டராக வரும் வரை காய்ச்ச வேண்டும். அந்த கஷாயத்தை, பெரியவர்கள், 60 மில்லி; சிறியவர்கள், 30 மில்லி அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்* தொடர் இருமல், தீவிர காய்ச்சல், மூச்சுத் திணறல், உளவியல் ரீதியான குழப்பம், உதடுகள் மற்றும் முகம் நீல நிறத்தில் மாறுவது உள்ளிட்ட பிரச்னைகள், 72 மணி நேரத்திற்குள் தீவிரமானால், உடனடியாக டாக்டரின் ஆலோசனைப்படி, மருத்துவமனையில் சேர வேண்டும்* தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்கள், எட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றும் வகையில், 'என் 95 மாஸ்க்' அணிய வேண்டும்* வீட்டில் கைப்படும் இடங்களில், 'லைசால்' போன்ற கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். அரசின் அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றி, கொரோனாவை கட்டுப்படுத்த, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்