பள்ளிகளில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, 50 - 50 என்ற புதிய திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831

பள்ளிகளில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, 50 - 50 என்ற புதிய திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
அதாவது, ஒரு வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களில், பாதி பேரை மட்டும், பள்ளிக்கு வர அனுமதிப்பது; மீதி மாணவர்களை, வீடுகளில் இருந்தபடியே பாடம் படிக்க ஏற்பாடு செய்வது தான், இந்த திட்டம். இதற்காக, கல்வி தொலைக்காட்சி சேனல்களுடன் கைகோர்க்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில், இந்த திட்டம் அமலுக்கு வருமா என்பது, விரைவில் தெரிய வரும்.

திறப்பு எப்போது?

சீனாவில் பரவ துவங்கிய கொரோனா, இப்போது உலகம் முழுவதையும் முடக்கிப் போட்டுள்ளது. இந்தியாவில், மார்ச் மாத துவக்கத்தில், வைரஸ் பரவ ஆரம்பித்தது. தொற்று பரவலை தடுக்க, நாடு முழுதும் மார்ச், 15 முதல், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. பள்ளிகளில், ஆண்டு இறுதி தேர்வும் நடத்தப்படவில்லை.இதையடுத்து, அனைத்து மாநிலங்களும், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும், மாணவ - மாணவியர் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டதாக அறிவித்தன. பல மாநிலங்களில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள் நடத்தப்படவில்லை. கொரோனா பரவல் நிற்காத நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியவில்லை.இந்நிலையில், அடுத்த மாதம் முதல், புதிய கல்வி யாண்டு துவங்குகிறது. வைரஸ் பரவலை தடுக்க, 'மக்கள், கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்; சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்' என, வலியுறுத்தப்படுகிறது.

ஆலோசனை

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், தொற்று பரவல் முற்றிலும் நிற்க, பல மாதங்களாகும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனால், பள்ளிகள் திறக்கப்பட்டால், மாணவ - மாணவியர் கண்டிப்பாக, சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.அதே நேரத்தில், பள்ளி மாணவ - மாணவியரிடம், சமூக விலகலை கடைப்பிடிக்க வைப்பது எளிதல்ல.எனவே, வரும் கல்வி ஆண்டில், பள்ளிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.இது பற்றி, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலிடம், ஆய்வு செய்து பரிந்துரைகளை தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து, பள்ளிகளை நடத்துவதற்கான பல வழிகளை, என்.சி.இ.ஆர்.டி., ஆலோசித்து வருகிறது.

இது பற்றி, என்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் ருஷிகேஷ் சேனாபதிகூறியதாவது:


சமூக விலகலை கடைப்பிடிக்கும் வகையில், 50 சதவீத மாணவ - மாணவியருடன் பள்ளிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 50 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வரும் வகையில், ஒற்றை, இரட்டை இலக்க அடிப்படையில் வகுப்புகளை பிரித்து, ஒரு நாள் விட்டு ஒரு நாள், பள்ளிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது அல்லது பள்ளிகளை, தினமும், இரண்டு, 'ஷிப்டு'களாக நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.பள்ளிகளில், தினமும், காலையில் நடக்கும் வழிபாட்டு கூட்டம், கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்த, ஓராண்டுக்கு தடை விதிக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும், மாணவ - மாணவியரிடம், சமூக விலகலை கடைப்பிடிக்க வைப்பது எளிதல்ல, இவர்கள் எப்போதும், கூட்டமாக இருப்பதையே விரும்புவர்.வகுப்பறைகளில் மட்டுமின்றி, பள்ளிகளில் கை கழுவும் இடங்கள், பள்ளி பஸ்கள் உட்பட பலவற்றிலும், சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட வேண்டியது கட்டாயம். இப்போது, 'ஆன்லைன்' மூலம் கல்வி பயில்வது பிரபலமாகி வருகிறது.அதனால், 50 சதவீத மாணவர்களை, பள்ளிக்கு வராமலேயே, ஆன்லைனில் படிக்க வைப்பது பற்றியும் ஆலோசித்து வருகிறோம். இதற்காக, ஒவ்வொரு வகுப்பிற்கும், தனித்தனி, 'டிவி' சேனல்கள் நடத்தவும், ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த சேனல்கள் வழியாக, அந்த வகுப்பிற்கான பாடங்கள் நடத்தப்படும்.

இப்படி, ஒரு ஆண்டுக்கு, பள்ளிகளை கட்டுப்பாடுகளுடன் நடத்த வேண்டியது அவசியம். அதனால், மாணவர்கள் வருகையை குறைத்து, பள்ளிகளை நடத்த வேண்டும். அதே நேரத்தில், மாணவர்களின் கல்வி எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது.இது தொடர்பான எங்கள் பரிந்துரைகளை, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடம், இன்னும் இரண்டு நாட்களில் சமர்ப்பிப்போம். அதை பரிசீலித்து, பள்ளிகளை நடத்துவதற்கான விதிமுறைகளை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிடும். இவ்வாறு, அவர் கூறினார்.

கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகளை திறப்பது பற்றி, எந்த மாநில அரசும், எந்த முடிவும் எடுக்கவில்லை. எனினும், நடப்பு கல்வியாண்டுக்கான இறுதி தேர்வுகளை, ஜூலையில் நடத்த பல்கலைகளுக்கு, பல்கலை மானியக் குழு உத்தரவிட்டுள்ளது; ஆகஸ்ட் மாதத்தில் கல்லுாரிகளை திறக்கவும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திலும்...!

இந்த திட்டம், தமிழகத்தில் உள்ள, மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கும் அமலாகுமா என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, தமிழக பள்ளி கல்வித் துறைக்கு சொந்தமாக, கல்வி தொலைக்காட்சி உள்ளதால், அதன் வழியாக பாடங்களை நடத்த முடியும். ஆனால், மாணவர்களின் வீடுகளில், அதற்கான வசதிகள் இருக்க வேண்டியது அவசியம்.ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு வகுப்பிலும், நேரலைக்கான தொழில்நுட்ப கருவிகள், 'வீடியோ கேமரா' வசதிகள் கட்டாயம் வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும், பாடம் நடத்த ஆசிரியர்கள் மட்டும் போதாது; ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட, தொழில்நுட்ப பணியாளர்களும் நியமிக்கப்பட வேண்டும்.இது போன்ற நடைமுறை பிரச்னைகளை எல்லாம் ஆராய்ந்து வரும்,தமிழக பள்ளிக் கல்வித் துறை, இது தொடர்பாக விரைவில் முடிவெடுக்க உள்ளது.

ஜூலையில், 10, பிளஸ் 2 வகுப்பு தேர்வு

வைரஸ் பரவலை தடுக்க, மார்ச், 25ம் தேதி முதல், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பில் நடத்தப்படும், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகளை, முழுமையாக நடத்த முடியாமல் போய்விட்டது.'நடத்தப்படாத தேர்வுகள், ஜூலை, 1 முதல், 15ம் தேதிக்குள்நடத்தப்படும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்ரமேஷ் பொக்கிரியால் நேற்று தெரிவித்தார். இது தொடர்பான தேர்வு அட்டவணையை, சி.பி.எஸ்.இ., விரைவில் வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது

Post a comment

0 Comments