Title of the document
கொரோனா ஊரடங்கால் கல்வி கற்பித்தலில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய 12 பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்படுவதாகவும், இந்த குழு 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் கொரோனா ஊரடங்கால் கற்றல்-கற்பித்தலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள், அதனால் எழும் சிக்கல்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய 12 பேர் கொண்ட நிபுணர் குழுவை பள்ளிக்கல்வி துறையின் முதன்மை செயலாளர் தீரஜ்குமார் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த குழுவுக்கு பள்ளிக்கல்வி துறையின் ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமை வகிக்கிறார். இதில் சமக்ரா சிக்ஷா சார்பில் பிரதிநிதி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குனர், பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி, மெட்ரிகுலேசன் பள்ளிகள், அரசு தேர்வுத்துறை இயக்குனர்கள், கல்வி தொலைக் காட்சி அதிகாரி, பெற்றோர் ஆசிரியர் கழக அதிகாரி, யுனிசெப் பிரதிநிதி, தமிழ்நாடு மின் ஆளுமை பிரதிநிதி, சென்னை ஐ.ஐ.டி. சார்பில் பிரதிநிதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் கடந்த கல்வியாண்டில் கொரோனா ஊரடங்கால் முன்கூட்டியே பள்ளிகள் மூடப்பட்டதன் விளைவாக ஏற்பட்டுள்ள கல்வி, கற்பித்தல் பிரச்சினைகள் மற்றும் அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் வகுப்புகள் தொடங்குவதில் ஏற்படும் தாமதம் குறித்து ஆலோசனை வழங்க உள்ளது.
மேலும், கற்றல்-கற்பித்தலில் உள்ள இடைவெளிகளை கண்டறிவது, பள்ளி குழந்தைகளுக்கு தரமான கல்வியை தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதற்கான கற்பித்தல், கற்றல் செயல்முறைகளுக்கான தொழில்நுட்பம் மற்றும் ‘ஆன்லைன்’ வசதிகளை ஒருங்கிணைத்து மேம்படுத்த செயல் திட்டத்தை உருவாக்குவது போன்றவற்றை செய்ய உள்ளனர் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் முடிவுக்காக, இந்த குழுவினர் இதுகுறித்து ஆராய்ந்து 15 நாட்களுக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய இருக்கின்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment