Title of the document
நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில், மூன்று மாதங்களுக்கு செலுத்த வேண்டிய, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தா தொகையை பெறுவதற்கான மின்னணு விண்ணப்ப படிவத்தை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.மார்ச், 26ல், கொரோனா ஏற்படுத்தி உள்ள நெருக்கடியை கருத்திற் கொண்டு, 'பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

விண்ணப்பம் வெளியீடு

அதன்படி, மாதம், 15ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக ஊதியம் பெறுவோர், பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்திற்கு செலுத்தும் சந்தா தொகையை, மூன்று மாதங்களுக்கு, மத்திய அரசே செலுத்தும். அதுபோல, அந்த தொழிலாளர்களுக்கு, நிறுவனங்கள் சார்பில் செலுத்தப்படும் சந்தாவையும், மத்திய அரசே வழங்கும்.இத்திட்டத்தின் கீழ், சந்தா சலுகை பெறுவதற்கு, மின்னணு கணக்கு தாக்கல் விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து, மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கை:தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் கணக்கில், மத்திய அரசு வழங்கும் மூன்று மாத சந்தாவை வரவு வைப்பதற்காக, இ.சி.ஆர்., எனப்படும், மின்னணு ரசீதுடன் கூடிய கணக்கு தாக்கலுக்கான விண்ணப்ப படிவம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அதை பூர்த்தி செய்து விண்ணப்பித்தால், தொழிலாளர்களின் பிரத்யேக, யு.ஏ.என்., கணக்கில், மாத சந்தா வரவு வைக்கப்படும். நிறுவனங்கள், அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்கிய விபரங்களை தெரிவித்து, மின்னணு கணக்கு தாக்கல் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

அரசே செலுத்தும்

அதன் அடிப்படையில், நிறுவனங்கள் சார்பாக, தொழிலாளர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய சந்தா தொகையை, மத்திய அரசே செலுத்தும். இத்திட்டத்தால், 3.80 லட்சம் நிறுவனங்களைச் சேர்ந்த, 78 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவர். மத்திய அரசுக்கு, 4,800 கோடி ரூபாய் கூடுதலாகசெலவாகும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post