சுற்றுலாத் துறையில் சாதிக்க என்ன தகுதி

Join Our KalviNews Telegram Group - Click Here
படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும் என்ற காலம் மலையேறி விட்டது. ஒவ்வொருவரும் பன்முகத்திறன் பெற்றிருப்பதே அவருக்கான வாய்ப்புகளை இன்றைய உலகமயமாக்கல் சூழலில் உருவாக்கித் தரும் என்பதே இன்றைய நிஜம்.
பி.எஸ்சி., வேதியியல் முடிக்கும் ஒருவர் தனக்கான துறை சுற்றுலா தான் என ஆசைப்படலாம். இதுபோலவே தன் படிப்புக்கு சம்பந்தமில்லாத துறை மேல் பலருக்கும் கனவும் ஆசையும் இருக்கலாம்.
சுற்றுலாத் துறை பணி வாய்ப்புகள் இன்று நமது இளைஞர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது. பெரிய பெரிய சுற்றுலா ஏஜென்சிகள், ஸ்டார் ஓட்டல்கள் போன்றவற்றில் தான் இந்தத் துறை பணி வாய்ப்புகள் உருவாகின்றன.
சுற்றுலாத் துறையில் முறையான சான்றிதழ் அல்லது டிப்ளமோ படிப்பை முடித்தவருக்கான வாய்ப்புகள் அவ்வப்போது அறிவிக்கப்படுகின்றன. என்றாலும், இந்தத் துறை பணி வாய்ப்புகளுக்கான அடிப்படை தேவைகளாக நல்ல தகவல் தொடர்புத் திறன் தான் உள்ளது.
ஆங்கிலத்தில் சிறப்பாக பேச முடிந்தவரே இந்தத் துறையின் இலக்கு. மேலும், இந்திய வரலாறு, கலாசார சிறப்புகள், தொன்மையான பாரம்பரியம் போன்றவற்றில் நல்ல அறிமுகமும், ஞானமும் இருக்க வேண்டும் என்றே இந்த நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
வெறும் வரலாறு, புவியியல் போன்ற அடிப்படை தகவல்களுடன் எதிர்கால இந்தியா பற்றிய தெளிவான கருத்து பெற்றிருப்பதும் முக்கியமாக தேவைப்படுகிறது. நமது போக்குவரத்து வசதிகள், சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை நிறுவனங்களோடு நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ளும் திறன் பெற்றிருப்பதும் கூடுதல் திறன்களாக கருதப்படுகின்றன.
இந்த போக்குவரத்துத் துறை நிறுவனங்களின் கால அட்டவணை, முன்பதிவு செய்யும் வசதிகள் போன்றவற்றையும் பெற்றிருப்பது சிறப்பான பலன் தரும். ஓட்டல் மேனேஜ்மென்ட், சுற்றுலா நிர்வாகம், நல்ல உபசரிப்புத் திறன் போன்றவற்றைப் பெற்றிருப்பதும் சிறப்பான தகுதிகளாக அமையும்.
எனவே இந்தத் துறையில் நமக்கு முறையான கல்வித் தகுதிகள் இல்லையே என்று கவலைப்படாமல் இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பெற்றிட முயலுங்கள்.
இவை எல்லாவற்றையும் விட இந்திய மொழிகளில் சிலவற்றைக் கற்றுக் கொள்ளுங்கள். முதலில் பேசுவதற்கும் பின்பு எழுதுவதற்கும் கற்றுக் கொள்வது மிகவும் உதவும். குறிப்பாக இந்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்றவற்றை அறிவது உதவும்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்