Title of the document
கடல் பயணம் மற்றும் கப்பல் பணிகளில் இயற்கையிலேயே நம்மில் பலருக்கு ஆர்வம் இருக்கிறது. ஆனால் இதற்கு என்ன படிக்க வேண்டும் என்பது தான் தெரிவதில்லை.
இன்றையச் சூழலில் மரைன் இன்ஜினியரிங் படிப்பானது இதுபோன்ற இயற்கையான ஆர்வத்திற்கு நல்ல வழிகாட்டியாக விளங்குகிறது. மிக நல்ல சம்பளம், உலகெங்கும் சுற்றி வரும் வாய்ப்புகள், சவாலான பணிச் சூழல் என மரைன் இன்ஜினியரிங் தொடர்பான எதுவுமே நல்ல அம்சங்கள் என்றே கூறலாம்.
கப்பல் கட்டுதல், பராமரிப்பு, பிற கடல் போக்குவரத்துக் கருவிகள் பராமரிப்பு, துறைமுகங்கள் மற்றும் கார்கோ என்னும் சரக்குப் போக்குவரத்து என இதன் பணிப் பிரிவுகள் எண்ணற்றவை உள்ளன. மரைன் இன்ஜினியரிங் படித்து வருபவர்கள் பொதுவாக கப்பல்களின் மொத்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஒரு கப்பலின் இன்ஜின் அறையிலிருந்து, எலக்ட்ரிக் மோட்டார்கள், நீராவி இன்ஜின்கள், புரப்பல்லிங் இன்ஜின்கள் என மரைன் இன்ஜினியர்கள் கையாளும் அனைத்துமே ஒரு கப்பலின் அடிப்படையான மற்றும் இன்றியமையாத பொறுப்புகளாகும். கப்பலின் காஸ், ஸ்டீம் டர்பைன்கள், டீசல் மற்றும் நியூக்ளியர் புரப்பல்லிங் உபகரணங்கள் ஆகியவற்றையும் இவர்களே நிர்வகிக்கின்றனர்.
மரைன் இன்ஜினியர்கள் தான் மெர்ச்சண்ட் நேவியில் சேருவதற்கான நேரடித் தகுதியைப் பெறுகிறார்கள். கடற்படை, தனியார் மற்றும் அரசுத் துறை சரக்கு மற்றும் போக்குவரத்துக் கப்பல்களை இவர்கள் செலுத்துகிறார்கள். கப்பல் இன்ஜின் தயாரிப்பு நிறுவனங்கள், கப்பல் ஆய்வு நிறுவனங்கள், கப்பல் வடிவமைப்பு நிறுவனங்கள், கடற்படை ஆகியவற்றிலும் மரைன் இன்ஜினியர்கள் பெரிதும் தேவைப்படுகிறார்கள். மதுரையிலுள்ள ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிகல் சயின்ஸ் கல்வி நிறுவனம் தென்னிந்தியாவில் சிறப்பான மரைன் இன்ஜினியரிங் படிப்பைத் தரும் நிறுவனமாக விளங்குகிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post