Title of the document
குழந்தைகளே! உங்களிடம் ஊடரங்கு: நல்லதா? கெட்டதா? என்றொரு கேள்வியைக் கேட்டால், உங்களில் சிலர் நல்லது என்றும், வேறு சிலர் கெட்டது என்றும், இன்னும் சிலர் தெரியலையே... என்றும் பதில் சொல்லக்கூடும்.
உங்களின் இந்த பதில்களானது, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நீங்கள் அனுபவித்த ஊரடங்கு அனுபவங்களைப் பொருத்து அமைந்திருக்கும். பெற்றோர் அருகிருத்தல்; அன்பான அணுகுமுறை; உளங்கனிந்த உபசரிப்புகள்; உபயோகமான உரையாடல்கள்; ஆதரவான ஆற்றுப்படுத்துதல்; வியப்பூட்டும் விளையாட்டுகள்... என ஊரடங்கு நாட்களை மகிழ்ச்சியாக அனுபவித்த குழந்தைகள் “நல்லது’’ என்று சொல்லியிருக்கக் கூடும்.

குடும்ப வன்முறை; வேறு சில பிரச்னைகள்; பொருளாதாரச் சிக்கல்கள்; பள்ளிக்குச் செல்லாமை போன்ற உரிமை மீறல் பிரச்சினைகளை ஊரடங்கின்போது எதிர்கொண்ட குழந்தைகள் “கெட்டது’’ என்று கூறியிருக்கக் கூடும்.

இப்படியும் இல்லாமல், அப்படியும் இல்லாமல் எப்படியோ ஊரடங்கு நாட்களைக் கடத்தி விடுகிறவர்கள் “தெரியலையே...’’ என்று சொல்லியிருக்கலாம். இதே கேள்வியை பெரியவர்களாகிய எங்களைப் பார்த்து நீங்கள் கேட்பீர்களானால், நாங்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் “நல்லது’’ என்றுதான் சொல்வோம்.

“ஏன்?’’ என்று கேட்கிறீர்களா?

‘ஊரடங்கு’ வருவதற்கு முன்பு உங்கள் குடும்பம் இருந்த நிலையைச் சற்று நினைத்துப் பாருங்கள். எப்போதும் அவசர கதியில் இயங்கிக் கொண்டுக்கும் அப்பா; பள்ளிக்கூடம், படிப்பு, டியூசன்,
ஹோம்ஒர்க்... என்று விளையாடக்கூடிய நேரமில்லாமல் எப்போதும் டென்சனில் இருக்கும் நீங்கள், காலை எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லும் வரை பம்பரமாய் சுழன்று குடும்ப வேலைகளைச் செய்துகொண்டே இருக்கும் அம்மா - வேலைக்குச் செல்லும் அம்மாவின் நிலையைக் கேட்கவே வேண்டாம். 

கவனிப்பாரற்று இருக்கும் தாத்தா, பாட்டி... இப்படித்தானே உங்கள் குடும்பச் சூழல் இருந்தது. விடுமுறை நாட்கள்கூட வழக்கம்போல இயந்திரத்தனமாகத்தான் கழிந்திருக்கும். இந்த டென்சன் வாழ்க்கை ஒருவர் மீது ஒருவருக்கு வெறுப்பையும் கோபத்தையும் உண்டாக்கி இருக்குமே தவிர, அன்பையோ, அணுசரனையையோ ஏற்படுத்தி இருக்க வாய்ப்பு குறைவு. உண்மையில், ஏதாவது ஒரு நேரத்தில் இப்படியான மனவருத்தங்களுக்காக நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக தனிமையில் கலங்கி இருக்கிறோம்தானே!

இந்த ‘ஊரடங்கு’ வந்து, நம் குடும்ப வாழ்வை அப்படியே திருப்பிப் போட்டுவிட்டது என்றே சொல்லலாம். உங்கள் பெற்றோர்களை வீட்டிலேயே உங்களோடு உட்கார வைத்திருக்கிறது. காப்பகங்களில் தங்கியிருந்த குழந்தைகளும் வெளியூர்களில் படித்துக் கொண்டிருந்த குழந்தைகளும்கூட வீடு திரும்பியிருக்கிறார்கள். வெளியூர்களில் பணியாற்றிக் கொண்டிருந்த அண்ணன்களும் அக்காக்களும் கூட வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். தாத்தா, பாட்டி... என எல்லோரும் வீட்டுக்குள் இருக்கிற சூழல் இதற்கு முன்பு எப்போதாவது நமக்கு வாய்த்திருக்கிறதா?

இந்த அபூர்வமான சூழலிலும் தொலைக்காட்சி, கணினி, லேப்டாப், செல்போன் என்று ஆளுக்கொரு திசையில் உட்கார்ந்து கருவிகளை கட்டிக்கொண்டு அழாமல், இந்தச் சந்தர்ப்பத்தில் குடும்பத்தினர் எல்லோரும் உட்கார்ந்து பேசுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.

“உட்கார்ந்து பேசுவற்கு என்ன இருக்கிறது?’’ என்ற குழம்பாதீர்கள். பேசுவதற்கா நம்மிடம் சங்கதி இல்லை. பேசத் தொடங்குங்கள். நீங்களே ஆச்சர்யப்படும் அளவுக்கு அவ்வளவு விசயங்கள் இருக்கும் உங்களிடம். 

குழந்தைகளோடு அர்த்தமுள்ள உரையாடல்

ரொம்ப சாதாரணமாக தொடங்குங்கள். “நான் இப்போ என்ன கிளாஸ் படிக்கிறேன், கரெக்டா சொல்லுங்க...’’ என்று உங்கள் பெற்றோரிடமோ, தாத்தா பாட்டியிடமோ கேட்டுப் பாருங்களேன். 

தலையைச் சொறிந்து கொள்பவர்களும், அசடு வழிபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். பெரிதாக, சர்வதேச விசயங்கள் எதையும் பேசி போரடிக்க வேண்டிய தேவை இல்லை.

உங்கள் குடும்பத்தினருக்குள் மட்டுமே பேசவேண்டிய, அவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கக்கூடிய விசயங்களைப் பேசுங்கள். அவர்கள் உங்களோடு நெருங்கி விடுவார்கள்.

உங்களுக்குப் பெயர் சூட்டியது யார்? எதற்காக இப்படியொரு பெயரை வைத்தார்கள்? என்று உங்களுக்கு இதுவரை தெரியாமல் இருந்தால், அது பற்றி கேளுங்கள். குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பெயர் காரணம் கேட்டுப் பாருங்கள். அவர்களின் பதில்களில் அப்படியொரு சுவாரஸ்யம் இருக்கும்.

விருப்பமான உணவு, விருப்பான உடை, விருப்பமான நிறம் பற்றி எல்லோரும் பேசுங்கள். மறக்காமல், நீங்கள் விரும்பாத விசயங்கள் பற்றியும் பேசுங்கள்.

பிடித்தமான நண்பர்கள், பிடித்த ஆசிரியர்கள் குறித்துப் பேசுங்கள்; பிடிக்காத நண்பர்கள், ஆசிரியர்கள் பற்றியும் சொல்லத் தவறாதீர்கள். குடும்பத்தில் பாகுபாடு இருந்தால் அது பற்றியும் பேசுங்கள். பெரியவர்களின் சின்ன வயது அனுபவங்களைக் கேட்டு மகிழுங்கள்.

நீங்கள் குடியிருக்கும் வீடு, உங்கள் பகுதியில் உள்ள வழிபாட்டுத் தலங்களின் வரலாறு, கிராம தேவதைக் கதைகள், திருவிழாக்கள், நாடகம், கூத்து பற்றியும் சொல்லச் சொல்லுங்கள். உங்கள் எதிர்கால லட்சியம் பற்றி மனந்திறந்து பேசுங்கள்.

உங்களுக்குப் பிடித்த உங்கள் குணம், உங்களுக்கே பிடிக்காத உங்கள் குணம், பிறரிடம் உங்களுக்குப் பிடித்த குணம், பிறரிடம் உங்களுக்குப் பிடிக்காத குணம் பற்றி வெளிப்படையாக உரையாடுங்கள். இதன் மூலமாக பிடித்த குணங்களை வளர்த்துக் கொள்ளவும், பிடிக்காத குணங்களை தவிர்க்கவும் உறுதியெடுத்துக் கொள்ளுங்கள்.

அடிக்கடி வரும் கனவு பற்றி கருத்து கேளுங்கள். பிடித்தமான தலைவர்கள் பற்றி பேசுங்கள். நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல, அம்மாவுக்கு அருமையாக சமைக்க மட்டும் தெரியாது. அவர் படிக்கும் காலத்தில் கவிதை எழுதுபவராகவோ, பாட்டுப் பாடுபவராகவோ, ஓவியம் தீட்டக்கூடியவராகவோ, மேடைப் பேச்சாளராகவோ இருந்திருக்கலாம். அவருக்கு இப்போது வாய்ப்புகள் வழங்கி அவரை மகிழ்ச்சியடையச் செய்யுங்கள். அப்பா, தாத்தா, பாட்டி... என எல்லோருக்கும் கலைந்த கனவுகள் இருக்கலாம். அவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கி கைதட்டி, பாராட்டிக் கொண்டாடுங்கள்.

கதைகளைக் கேட்டுக் கேட்டு வளர்ந்த சமூகம் நம்முடையது. நாட்டுப்புறப் பாடல்கள், வாய்மொழி வரலாறுகள் மூலமாகத்தான் நம் முன்னோர்களின் வரலாறு அடுத்தடுத்த சந்ததியினருக்கு நகர்த்தப்பட்டே வந்திருக்கிறது. உங்கள் வீட்டில் பாட்டன், பாட்டி இருந்தால், அவர்களுக்கு உங்கள் காதுகளைக் கொடுத்தால் மட்டும் போதும். அவர்கள் ஆயிரமாயிரம் சங்கதிகளை கதையாக, பாட்டாக, பழமொழிகளாக, விடுகதைகளாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இடையிடையே நீங்களும் உங்கள் சங்கதிகளையும் எடுத்து விடுங்கள்.

போக்குவரத்து வசதியோ, செல்போன், லேப்டாப், டி.வி., பிரிட்ஜ், மிக்சி இப்படி எதுவும் இல்லாத அக்கால வாழ்க்கை அனுபவங்களைக் கேட்டு வைத்துக்கொள்ளுங்கள். முன்பொரு காலத்தில் இருந்த நாடகக் கொட்டகை, டூரிங் டாக்கீஸ், சைக்கிள் வாழ்க்கை, வானொலி, ட்ரங்க் கால், தந்தி, பேஜர்... அனுவங்களைக் கேட்டுத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இவை நீங்கள் அவசியம் கற்க வேண்டிய, உங்கள் பாடப் புத்தகங்கள் எதிலும் கிடைக்காத வரலாற்றுப் பாடங்கள்.

அப்பாவை சமைக்கச் சொல்லி, அம்மாவுக்கு ஓய்வெடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். நீங்களும் சமையலுக்கு உதவுங்கள். அப்பாவின் கைப்பக்குவம் உங்களை ஆச்சர்யப்படுத்தக் கூடும். ஆடுபுலி ஆட்டம், தாயம் என பெரியவர்கள் கைவசம் நிறைய விளையாட்டுகள் இருக்கும்.

அவற்றை கற்றுக்கொள்ளுங்கள். கேரம், செஸ் விளையாட்டுகள் உங்களுக்குத் தெரிந்தால் அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். நாம் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதற்காக, வீதிகளில் பாதுகாப்புப் பணிகளிலும், துப்புறவுப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நன்றி சொல்வோம்.

குழந்தைகளே! ‘ஊரடங்கு’ பற்றியும், ‘கோவிட் 19’ கொரானா பற்றியும் கொஞ்சம் பேசுங்கள். “‘அரசு பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சூழ்நிலைகளில் ஊரடங்குப் பிறப்பித்திருக்கிறது. என்றாலும், உலகிலேயே ஒரு நோய்க்காக நாடெங்கிலும் ஊரடங்கு அமுலில் இருப்பது இதுதான் முதல் முறை’’ என்று சொல்லுங்கள்.

“உலகில் இப்படியான புதிய புதிய நோய்கள் உருவாகுவதற்கு, ஆறறிவு படைத்த மனிதரின் சுயநலம்தான் காரணம்’’ என்று சொல்லுங்கள். “இந்த உலகை மனிதன் மட்டும் உரிமை கொண்டாட முடியாது. தாவரங்கள் உட்பட எல்லா வகையான உயிரினங்களுக்கும் இங்கே வாழ உரிமை உண்டு. எல்லா உயிரினங்களையும் போலவே மனிதனும் ஆரம்ப காலகட்டத்தில் காடுகளில்தான் வசித்தான். 

இயற்கையோடு இணக்கமான வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டிருந்தான். மனிதன் எப்போது கருவிகளைக் கண்டுபிடிக்கத் தொடங்கினானோ, அப்போதே இயற்கையிலிருந்து விலகித் தொடங்கியது மட்டுமல்லாமல், இயற்கைக்கு எதிராகவும் செயல்படத் தொடங்கிவிட்டான். நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய அனைத்தையும் மாசுபடுத்தினான். கடல் சீற்றமடைந்தது. ஆழிப்பேரலையாக சுனாமி வந்தது; கஜா வந்தது; வர்தாவும் வந்தது. கொத்துக் கொத்தாய் மனிதர்களைக் கொன்று போனது. நிலம் நடுங்கியது. 

ஏராளமானவர்களை தனக்குள் விழுங்கிவிட்டது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இயற்கையோடு இணக்கமாக வாழ்ந்த விலங்குகளும், பறவைகளும் இயற்கைப் பேரிடரை முன்னமே அறிந்து தப்பித்துக் கொண்டன. கருவிகளை மட்டுமே நம்பிய மனிதர்களும், மனிதனை நம்பிய விலங்குகளும்தான் செத்தொழிந்தன’’ என்பதை பெரியோர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

இயற்கையோடு இயைந்த வாழ்க்கைக்குத் திரும்பச் சொல்லி கேட்டுக்கொள்ளுங்கள். அவர்களிடம் சில ஆலோசனைச் சொல்லுங்கள்: “மரக்கன்றுகளை நட்டு வளர்த்தால், நீர்வளம் பெருக்கிவிடலாம். தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவதால் உற்பத்தியைக் குறைக்கலாம். கடைக்கு துணிப் பைகளை எடுத்துச் செல்வதன் மூலம் நெகிழி உபயோகிப்பதை தவிர்க்கலாம். 

நெகிழியையும் காகிதத்தையும் மறுசுழற்சி செய்யலாம், வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் மூலமாக நமக்குத் தேவையான காய்கனிகளை நாமே விளைவித்துக் கொள்ளலாம். இயற்கை வேளாண்மையைக் கடைபிடிப்போம்...’’ என உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள். உங்களுக்குத் தெரியாத வேறு சில விசயங்களையும் சொல்லி, உங்கள் உரையாடலை உற்சாகப்படுத்துவார்கள் பெரியவர்கள்.

குழந்தைகளே! “தன்சுத்தம், பிறர் சுத்தம், சுற்றுப்புறச் சுத்தம்’’ பற்றி இதற்கு முன் எத்தனையோ முறை, எத்தனையோ வடிவங்களில் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறோம். அப்போதெல்லாம்
அதன் அவசியம் உணராமல், கடைபிடிக்காமல் அலட்சியப்படுத்திய உங்களை ‘கெரானா’ வந்து கட்டாயப்படுத்திவிட்டது. அதன் அருமை பெருமைகளை உங்களுக்கு உணர்த்தியுள்ளது. எங்களது வேண்டுகோளெல்லாம், ஊரடங்குக்குக்குப் பிறகும் தொடர்ந்து கடைபிடியுங்கள். 

வாழ்க்கை முழுவதும் நாம் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். ஆனால், தேவையான நேரத்தில், தேவையான நபரிடம், தேவையானதை பேசுகிறோமா என்பதுதான் கேள்வி. பேசித் தீர்க்க முடியாத பிரச்னை என்று எதுவும் இல்லை என்பதை மனப்பூர்வமாக நம்புங்கள்.

பெற்றோர்கள், குழந்தைகளை அடிமைகளைப் போல நடத்திய அந்தக் காலம் மலையேறி விட்டது. குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான இடைவெளி குறைந்து, தோழமையோடு பழகுகிற காலம்
கனிந்திருக்கிறது என்கிற உண்மையை உணர்ந்து அச்சமின்றி பேசுங்கள். குழந்தைகளுக்கான உரிமைகளை வென்றெடுங்கள்.

‘ஊடரங்கு’ கால, குடும்ப உரையாடலை, ஊரடங்குக்குப் பிறகும் தொடர்ந்துகொண்டே இருங்கள். உங்கள் உரையாடல்களின் மூலமாக குடும்ப உறவுகளை வலிமைபடுத்துங்கள். குடும்பப் பாதுகாப்பை மேம்படுத்துங்கள். உங்களின் சிறந்த உரையாடல்கள் உங்களைச் சிறந்த குடிமகனாக உருவாக்கும் என்பது உறுதி.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post