குழந்தைகளே! குடும்பப் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

Join Our KalviNews Telegram Group - Click Here
நலந்தேனே! ஊரடங்கு வாழ்க்கை எப்படி இருக்கிறது? ஊடரங்கு போன்ற வீட்டுக்குள்ளேயே இருக்க நேரிடும் நெருக்கடியான நேரங்களில் நம் குடும்பப் பொறுப்புகளை நாம் எப்படிப் பயனுள்ள வகையில் பகிர்ந்து கொள்ளலாம் என்று பார்க்கலாம்.
முதலில் சாப்பிட்டீர்களா? செல்லுங்கள்.

“ஆமாம்’’ என்றால், சமைத்துச் சாப்பிட்டீர்களா? அல்லது சமைத்ததைச் சாப்பிட்டீர்களா?

அதாவது, அம்மாவோ அப்பாவோ சமைக்கும்போது, நீங்களும் அவர்களுடன் இருந்து உதவி செய்து, பின்னர் சாப்பிடும் இடத்திற்கு பாத்திரங்களையும் தண்ணீரையும் கொண்டு வந்து வைத்துக்கொண்டு அம்மாவும் அப்பாவும் உங்களுடன் சாப்பிட ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டபடி சாப்பிட்டு முடித்து, பாத்திரங்களைக் கழுவி அடுக்கிவிட்டு வந்தீர்களா? 

அல்லது, அம்மாவோ அப்பாவோ சமைத்து, சமைத்த உணவுகளையும், தட்டுகள், தண்ணீர், தம்ளர் வகையறாக்களையெல்லாம் அவர்களே கொண்டு வந்து சாப்பிடும் இடத்தில் வைத்தபிறகு, நீங்கள் கையை மட்டும் கழுவிக்கொண்டுச் சாப்பிட உட்கார்ந்து, அம்மா பரிமாறிக்கொண்டே இருக்க, நீங்கள் ரசித்து ருசித்து சாப்பிட்டு முடித்து, அப்படியே எழுந்து கைகழுவிக் கொண்டு வந்துவிட்டீர்களா?
இந்த இரண்டில், முதலாவதுதான் ‘குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளுதல்’ எனப்படும்.

குடும்பப் பொறுப்புகள் என்றால் என்ன?
உண்ண உணவு, உடுத்த உடை, வசிக்க இருப்பிடம் இம்மூன்றும் மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவசியத் தேவையும், அடிப்படை உரிமையுமாகும். இம்மூன்றுக்கும் பொறுப்பானவர்கள் குடும்பத்தின் தலைவரும், தலைவியும் ஆவர். வேலைகள் செய்வதன் மூலமே இப்பொறுப்புகளை நிறைவேற்ற முடியும். குழந்தைகளும் இப்பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் ‘ஊடரங்கு’ போன்ற நெருக்கடியான நேரங்களையும் குழந்தைகள் பயனுள்ளனதாக்கிக் கொள்ள முடியும்.

18 வயது வரையிலான அனைவரும் குழந்தைகள்தாம் என்பதால் அவரவர் வயதிற்கேற்ப ஆண்-பெண் பாகுபாடு இல்லாமல் குடும்ப பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளலாம். முதலில், சமையல் பணிகளை குழந்தைகள் எவ்வாறு பகிர்ந்து கொள்ளலாம் என்று பார்ப்போம். பெரும்பாலான குடும்பங்களில் அம்மாதான் சமையல் செய்வார். நாம் உண்ணும் உணவு எவ்வாறு சமைக்கப்படுகிறது என்பதை என்றைக்காவது முழுமையாகப் பார்த்திருக்கிறீர்களா? 

அரிசி சோறாகவும், காய்கள் குழம்பாகவும் கூட்டுப் பொறியலாகவும் உருமாறும் அழகை என்றாவது பார்த்து ரசித்திருக்கிறீர்களா? அதற்கு இந்த ஊரடங்கை உகந்த நேரமாக்கிக் கொள்ளுங்கள். வெறும்
வேடிக்கைப் பார்ப்பவர்களாக மட்டும் இருக்காவமல், சமையலுக்கு உதவுவதன் மூலம் நீங்களும் ‘சமையலர்’ ஆகிவிடுவீர்கள்.

அரிசியைக் கழுவிக் கொடுக்கலாம். குக்கரில் சாதம் வைக்கலாம். காய்களை அலசி, வாய்ப்பிருந்தால் தோல் சீவி, நறுக்கிக் கொடுக்கலாம். சப்பாத்தி செய்வதற்கு மாவு பிசைந்து கொடுக்கலாம். தேங்காமல் துருவிக் கொடுக்கலாம். கிரண்டரில் மாவு அரைக்க உதவலாம்.

சாப்பிடுவதற்கான பாத்திரங்களையும் தண்ணீரையும் எடுத்து வந்து வைக்கலாம். உணவுப் பொருட்களை பரிமாறலாம். நாம் சாப்பிட்ட பாத்திரத்தை நாமே கழுவி வைக்கலாம். பாத்திரங்களை அடுக்கி வைக்கலாம். மிக்சியில் பழரசம் தயாரிக்கலாம்.

உங்கள் துணிகளை நீங்களே துவைத்து, காயவைத்து, மடித்து வைக்கலாம். காய்ந்த துணிகளை அடுக்கி வைக்கலாம். தினசரி காலண்டர் தேதிகளைக் கிழிப்பதுகூட ஒரு வேலைதான். அதை அதிகாலையிலேயே செய்யலாம். வாசல் கூட்டி கோலமிடலாம்.

குடிக்கவும் குளிக்கவும் சமைக்கவும் தண்ணீர் பிடிக்கலாம். பால் பாக்கெட் வாங்கிவந்து தேநீர் போடலாம். வீட்டை கூட்டி சுத்தம் செய்யலாம். புத்தகங்களைச் தூசுதட்டி அடுக்கி வைக்கலாம், வீட்டுத்தோட்டமோ, மாடித்தோட்டமோ இருந்தால் செடிகளுக்கு நீர் வார்க்கலாம். இப்படியான வீட்டு வேலைகளை யாரும் சொல்லிச் செய்வதை விட நாமே முன்வந்து செய்வதுதான் சிறப்பு.

இப்படி குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதால் என்ன பயன் என்று கேட்கிறீர்களா?

ஒரு வேலையைச் செய்து முடித்த பிறகு ஏற்படும் மனநிறைவு இருக்கிறதே அதை சொல்லி விளக்க முடியாது, அனுபவித்தால்தான் தெரியும். தன்னாலும் ஒரு வேலையைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை உங்களுக்கு உண்டாகும்.

நீங்கள் செய்த வேலைக்கு நீங்களும் ஒரு பொறுப்பாளர் ஆகிவிடுகிறீர்கள். தனது பங்களிப்பினாலும்தான் அந்தப் பெரிய வேலை முடிந்திருக்கிறது என்கிற பெருமிதம் உங்களுக்கு ஏற்படுகிறது.

குடும்பத்தின் மீது அக்கறைகொண்டவராக உங்கள் மதிப்பு உயர்கிறது. உங்களிடம் ஒரு வேலையைக் கொடுத்தால், நீங்கள் அந்த வேலையைப் பொறுப்பாக செய்துமுடிப்பீர்கள் எனும் நம்பிக்கை உங்கள் மீது பிறருக்கு ஏற்படுகிறது.

வேலைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது அவர்களுக்கு நெருக்கமானவர்களாகி விடுகிறீர்கள். கூடித் தொழில் செய்யும் கூட்டு மனப்பான்மை வளர்கிறது. ஒருவருக்கு ஒருவர் உதவி வாழும் உளப்பாங்கு உண்டாகிறது. தனது வேலைகளைத் தானே செய்துகொள்ளும் சுயசார்புள்ள மனிதராக வளர்வீர்கள்.

எந்த வேலையையும் கௌரவக் குறைச்சலாக கருத மாட்டீர்கள். வீட்டு வேலை செய்பவர்களையோ மற்ற தொழிலாளர்களையோ கேவலமாகப் பார்க்கும் பார்வை உங்களிடம் இருக்காது. சக மனிதர்களை மதிக்கும் பண்புள்ள மனிதராவீர்கள். தான் விரும்பிய உணவை தானே சமைத்து உண்ணும் குணம் இயல்பாகவே உங்களுக்கு வந்துவிடும். ஆகவே ஆரோக்கியமற்ற உணவு வகைகளைச் சாப்பிட வேண்டிய அவசியமிருக்காது.

ஆண் - பெண் முரண்பாடு உண்டாகாது. உணவுப் பொருட்களானாலும், வெறு எந்த பொருளானாலும் வீணாக்க மனம் வராமல், அதை மறுஉருவாக்கம் செய்ய முயற்சிப்பீர்கள்.

ஒரு பொருளை வாங்கி வருகிறபோது அதைப் பயன்படுத்த மட்டுமே உங்களுக்கு ஆர்வம் இருக்கும். நீங்களே அந்தப் பொருளை உருவாக்கியிருந்தால் அதன்மீது ஓர் உளப்பூர்வமான ஈடுபாடு உண்டாவதை உணர்வீர்கள்.

செடிகளுக்கு தொடர்ந்து நீர் ஊற்றுவதன் மூலம் அதன் மீது ஈடுபாடு உண்டாகி சிநேகமாகி விடுவீர்கள். குடும்ப வேலைகளைப் பகிர்வதன் மூலம் நேரமேலாண்மையை கடைபிடிக்கத் தொடங்குவீர்கள்.
ஒரு வேலையைச் செய்து முடிக்க எவ்வளவு நேரமாகிறது என்பதை தெரிந்துகொள்வீர்கள். அதே வேலையை குறைவான காலத்தில் எப்படி செய்துமுடிக்கலாம் என யோசிப்பீர்கள். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளைக்கூட செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்குள் தோன்றும். 

எந்த வேலையை முதலில் செய்யலாம், எந்த வேலைகளை அடுத்தடுத்து செய்யலாம் என்றும், எந்த வேலை அவசியமானது, எந்த வேலை தேவையில்லாதது அல்லது இதே வேலையை இன்னொரு விதமாக எப்படிச் செய்யலாம்... என நேரமேலாண்மை உங்களுக்கு மெல்ல மெல்ல கைவசமாகிவிடும். இந்த அனுபவம் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நீங்கள் அழுக்காக இருக்கும்வரையில்தான் உங்களால் அழுக்கான உடைகளை உடுத்திக் கொண்டிருக்க முடியும். நீங்கள் குளித்து சுத்தமாகிவிட்டால் துவைத்த துணிகளைத்தான் உடம்பு விரும்பும். உங்கள் உள்ளமும் அப்படித்தான். தன் சுத்தம் மீது விருப்பம் ஏற்பட்டுவிட்டால், பிறர் சுத்தம், சுற்றுப்புறத் தூய்மை எல்லாம் சாத்தியமாகிவிடும்.

குடும்பம் உங்களுக்குமானதுதான். அந்த உரிமையை இந்த ‘ஊரடங்கு’ காலத்தில் குடும்ப பொறுப்புகளை பகிர்ந்துகொள்வதன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்