அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி அருகே உள்ள குந்தபுரம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகள் அபி(வயது 11). 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கல்வி தொடர்பான பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும், விருதுகளையும் வென்றவர்.
இவர் கொரோனா வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனது கிராமத்தில் உள்ள அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், மூலிகை ‘சூப்’ வழங்க வேண்டும் என தீர்மானித்தார். இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை கொண்டு ‘சூப்’ தயாரிக்க முடிவு செய்தார். அதன்படி முருங்கை கீரை, மிளகு, சீரகம், பூண்டு, தக்காளி, சின்ன வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு கலந்த சூப்பை அவரது தாயாரின் உதவியோடு தயாரித்து கிராமத்தில் உள்ள அனைவருக்கும் வழங்கினார்.
இதுகுறித்து மாணவி அபி கூறுகையில்,
‘எனது கிராம மக்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காக எனது பெற்றோர் கொடுத்த பணத்தில் செலவு போக, மீதி நான் சேமித்த பணத்தை வைத்து ‘சூப்’ தயாரித்து கொடுத்து உள்ளேன்’ என்றார். இவரது தந்தை அண்மையில் ஒரு விபத்தில் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது தந்தையை இழந்த நிலையில் குடும்பம் வறுமையில் வாடினாலும், மக்கள் நலமுடன் வாழவேண்டும் என்ற சிந்தனையுடன் சிறுமி செய்துள்ள இந்த செயலை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.
துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!
Post a Comment