குரூப் - 4 தேர்வு முறைகேடு... மேலும் இருவர் கைது

Join Our KalviNews Telegram Group - Click Hereகுரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகருக்கு பணம் கொடுத்து தேர்வில் முறைகேடாக வெற்றி பெற்ற மேலும் இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

குரூப் - 4 தேர்வு முடிவுகளை தொடர்ந்து அதற்கான தரவரிசை பட்டியல் வெளியான போது, இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் மையங்களில் தேர்வெழுதியவர்கள் அதிக அளவில் முதல் 100 இடங்களுக்குள் வந்திருந்தனர். முறைகேடு நடைபெற்றது உறுதியான நிலையில், அது தொடர்பான வழக்கை சிபிசிஐசிடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுவரை இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள், முறைகேடாக தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் என 12 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் அரசு ஊழியர்களான பள்ளிக்கல்வித் துறை ஊழியர் ரமேஷ், எரிசக்தி துறை ஊழியர் திருக்குமரன், டிஎன்பிஎஸ்சி அலுவலக ஊழியர் ஓம் காந்தன் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட 3 பேரில் சீனிவாசன் என்ற தேர்வர் தாம் முறைகேடாக தேர்வெழுதி தேர்ச்சி பெற்றது மட்டுமின்றி, இடைத்தரகராக செயல்பட்டு மேலும் 4 பேரிடம் தலா 5 லட்சம் ரூபாய் வீதம் பெற்று முறைகேடாக வெற்றி பெற உதவி செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து தொடர்ந்து 5வது நாளாக புலன்விசாரணையை தீவிரப்படுத்திய சிபிசிஐடி போலீசார், கள்ளக்குறிச்சி மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த விக்னேஷ் மற்றும் கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த சிவராஜ் ஆகியோரை கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும் இடைத்தரகருக்கு தலா ஏழரை லட்ச ரூபாய் பணம் கொடுத்து, முறைகேடாக தேர்ச்சி பெற்றது தெரியவந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு வந்த டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளிடம், முறைகேடு தொடர்பான கூடுதல் விவரங்கள் கேட்டறியப்பட்டன.

ஏற்கனவே விசாரணை தொடங்கிய முதல் நாளிலேயே, டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஆவணங்கள் சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்