கல்வித்துறையில் முதல்முறையாக நியமிக்கப்பட்ட பள்ளிக்கல்வி ஆணையர் இன்று முதல் மண்டல அளவில் நேரில் ஆய்வு.!!

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307


பள்ளிக்கல்வித்துறையில் முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ள ஆணையர் இன்று முதல் தமிழகம் முழுவதும் மண்டல அளவில் கல்வித்தரத்தை உயர்த்துவது குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். தமிழகத்தில் பள்ளிக் கல்வி இயக்ககத்தின்கீழ் 37 ஆயிரத்து 211 அரசு பள்ளிகளும், 8 ஆயிரத்து 357 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 12 ஆயிரத்து 419 தனியார் பள்ளிகளும் உள்ளன.

இதில் 32 முதன்மைக்கல்வி அலுவலர்கள், 117 மாவட்ட கல்வி அலுவலர்கள், 413 வட்டார கல்வி அலுவலர்கள் உள்ளனர். இவர்களுக்கு மேல் இயக்குனர்கள் மற்றும் ஐஏஎஸ் அந்தஸ்தில் முதன்மை செயலாளர் உள்ளனர். பள்ளிக் கல்வியில் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.


அதன்படி துறை இயக்குநர்களைக் கண்காணிக்க பள்ளிக்கல்வி ஆணையர் என்ற பதவி அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்டது. புதிய ஆணையராக சிஜி தாமஸ் வைத்தியன் நியமிக்கப்பட்டார். இவர், கல்வித்தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி, தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக சென்று கல்வித்தர மேம்பாடு குறித்து ஆலோசிக்க உள்ளார்.

இன்று (9ம் தேதி) முதல் 19ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஆலோசனை நிகழ்வில் அந்தந்த மண்டல முதன்மைக் கல்வி அலுவலர்கள், கல்வி மாவட்ட அலுவலர்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட 20 தலைமையாசிரியர்கள், 20 ஆசிரியர்கள் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.


முதல்கட்டமாக இன்று கோவையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட அளவில் ஆலோசனை நடத்துகிறார். பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை ஆலோசனை நடக்க உள்ளது. ஆலோசனையில் மாணவர்களின் கல்வித்திறன், பயிற்றுவித்தல் முறை, இவற்றை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கல்வி வளர்ச்சி குறித்து கருத்துக்களை கேட்டு கலந்துரையாட உள்ளார்.

தொடர்ந்து நாளை 10ம் தேதி சேலம் மண்டல அளவில் சேலத்திலும், 11ம் தேதி விழுப்புரம் மண்டலத்திலும், 12ம் தேதி சென்னை மண்டல அளவில் சென்னையிலும், 13ம் தேதி திருச்சி மண்டலத்திற்கு திருச்சியிலும், 16ம் தேதி நெல்லை மண்டல அளவில் நெல்லையிலும், 17ம் தேதி மதுரை மண்டலத்திற்கு மதுரையிலும், 18ம் தேதி தஞ்சை மண்டலத்திற்கு தஞ்சையிலும், 19ம் தேதி திருவண்ணாமலை மண்டலத்திற்கு திருவண்ணாமலையிலும் ஆய்வு நடத்த உள்ளார்.


சென்னையில் மட்டும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலோசனை நடக்கிறது.கூட்டத்தில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் விவரங்களை commissionersedu@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உடனே அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர ஆணையர் சுற்றுப்பயணத்தின்போது பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வாய்ப்புள்ளதால் போதிய முன்னேற்பாட்டுடன் தயாராக இருக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments