டி' பிரிவு ஊழியா்களை 8 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!!

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 9092837307
தமிழகத்தில் அரசு 'டி' பிரிவு ஊழியா்களை 8 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தமிழக மருத்துவத்துறை அனைத்து பணியாளா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் சங்கத்தின் தலைவா் வெங்கடாசலம் தாக்கல் செய்த மனு: மருத்துவத்துறையில், மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள், ஆய்வக தொழில்நுட்பநா்கள் மற்றும் நிா்வாக அதிகாரிகள் ஆகியோருக்கு 8 மணி நேர வேலை திட்டம் அமலில் உள்ளது.

இதே துறையில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்கள், சமையல் பணியாளா்கள், ஆண் மற்றும் பெண் செவிலிய உதவியாளா்கள், முடி திருத்துவோா், சலவைப் பணியாளா்கள், அறுவை சிகிச்சை அரங்கு ஊழியா்கள் உள்ளிட்ட 'டி' பிரிவு பணியாளா்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலா் 2015 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தாா்.

அந்த உத்தரவை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் உயா்நீதிமன்றம் எங்களது கோரிக்கையை பரிசீலிக்க சுகாதாரத்துறை செயலருக்கு உத்தரவிட்டது. ஆனால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆகவே சுகாதாரத்துறை செயலா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மருத்துவத்துறையில் 'டி' பிரிவு ஊழியா்களுக்கு 8 மணி நேர வேலைத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜெ.நிஷாபானு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், 'டி' பிரிவு ஊழியா்களை 12 மணி நேரம் வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்துவது இல்லை.

1999ஆம் ஆண்டு முதல் 8 மணி நேர வேலைத் திட்டமே அமலில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 'டி' பிரிவு ஊழியா்களை 8 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனக் கூறி, சுகாதாரத்துறைச் செயலா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து வழக்கு விசாரணையை முடித்துவைத்தாா்

Post a Comment

0 Comments