Title of the document



பள்ளி செல்லும் மாணவ- மாணவிகளின் நலன் கருதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்படுகிறது.தமிழ்நாட்டில் தற்போது 43 ஆயிரம் பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படுகிறது. இதன் மூலம் 49.85 லட்சம் மாணவ-மாணவிகள் பயன்பெறுகிறார்கள்.ஏழை மாணவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார். எம்.ஜி. ஆர். ஆட்சி காலத்தில் இது சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்த போது சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டது.

சமீப காலமாக, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதை தடுக்கவும், மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதில் மேலும் ஒரு நடவடிக்கையாக அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவும் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. காலை உணவாக மாணவ- மாணவிகளுக்கு தரமான உணவு வகைகளை வழங்க வேண்டும். இதற்காக சிறந்த சமையல்காரர்களை கூடுதலாக நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவ- மாணவிகளுக்கு காலை உணவாக இட்லி, பொங்கல், சப்பாத்தி ஆகியவற்றை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. புரோட்டீன், மற்றும் கலோரி அளவை ஆய்வு செய்து உணவு வழங்கப்படும். கூடுதலாக பழம் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.காலை உணவு திட்டத்தையும் செயல்படுத்தினால் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.500 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. என்றாலும், இதன் மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசு பள்ளி மாணவர்கள் வேறு பள்ளிக்கு செல்லாமல் தடுக்கவும் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post