மாணவர்களுக்கு கதை புத்தகம் வாங்க ஆண்டுக்கு 40,000 ரூபாய் செலவிடும் அரசுப் பள்ளி ஆசிரியை!

Join Our KalviNews Telegram Group - Click Here

பாடப் புத்தகங்களைத் தாண்டிய வாசிப்புப் பழக்கமே மாணவர்களின் தனித்திறமைகளை வளர்க்கும்; வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்" என்பதை அழுத்தமாகக் கூறுகிறார் ஆசிரியை ரேணுகா. இதற்காக தன் வீட்டிலேயே வாரம்தோறும் `புத்தக வாசிப்பு முகாம்' நடத்திவருவதுடன், தன் சொந்தப் பணத்தில் ஆண்டுக்கு 40,000 ரூபாய்க்கு மேல் செலவிடுகிறார். இவர், நாமக்கல் மாவட்டம் இறையமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை. மாணவர்களின் வாசிப்புப் பழகத்தை ஊக்குவிக்க ரேணுகா மேற்கொண்டுவரும் பாராட்டுக்குரிய செயல்பாடுகள் குறித்து அவரிடம் பேசினோம்.


தனியார் பள்ளி மாணவர்களுக்கு, அவர்கள் கேட்காமலேயே நிறைய ஆக்டிவிட்டி செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்குது.

அது, அவங்களுக்குப் பிடிக்குதா... இல்லையா என்பது தனிக்கதை. ஆனா, அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு அவங்க விருப்பப்படுற நியாயமான விஷயங்கள்கூட எளிதில் கிடைக்கிறதில்லை. இந்த இடைவெளி, நான் ஆசிரியர் பொறுப்புக்கு வந்தபோது என்னை ரொம்பவே யோசிக்க வெச்சது.

நான் நிறைய புத்தகங்களை வாசிப்பேன். என்னிடமுள்ள புத்தகங்களை என் வகுப்பு மாணவர்களுக்கு வாசிக்கக் கொடுப்பேன். நான் கற்ற விஷயங்களை அவங்ககிட்ட பகிர்ந்துப்பேன். ஒருகட்டத்துல ஆர்வமுள்ள மாணவர்கள், `எங்க ஊர் நூலகத்துல எங்களுக்குப் பயனுள்ள புத்தகங்கள் இருப்பதில்லை'னு ஆதங்கமா சொல்வாங்க.

மாணவர்களின் ஆர்வத்தை முடக்கிவைக்கிறது மிகப்பெரிய சமுதாயப் பின்னடைவா மாறிடும்னு ஆதங்கப்பட்டேன். அதற்குத் தீர்வுக்காண நான் பல முயற்சிகள் எடுத்தும் பலன் இல்லை. அதனாலதான் புத்தக வாசிப்பு முகாம் நடத்தினால், குழந்தைகளுக்கு வாசிப்பு ஆர்வம் அதிகரிக்கும்னு உறுதியா நம்பினேன்" என்கிறார் ஆசிரியர் ரேணுகா. ஏராளமான தடைகளைத் தாண்டி, இவர் கனவை நிறைவேற்றப் பல ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

``தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்றக் கழகச் சங்கத்துல உறுப்பினரா இருக்கேன். அதனால, களப்பணி உட்பட பல்வேறு நிகழ்வுகளுக்காக நிறைய அரசுப் பள்ளிகளுக்குப் போவேன். அங்கெல்லாம் நூலகம் இருந்தாலும்கூட, குழந்தைகளுக்கான புத்தகங்கள் இருப்பதில்லை. மாணவர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க ஆசிரியர்களுக்கும் நேரம் இருப்பதில்லை. இப்படி, நிறைய பிரச்னைகள் இருக்கு.

ஆசிரியை ரேணுகாபாடப் புத்தகங்களைப் படிக்கவே பல குழந்தைகள் ஆர்வம் காட்டுறதில்லை. அவங்களைக் கதைப் புத்தகங்கள் படிக்க வைக்கிறது பெரிய சவால். ஏன் படிக்கணும், வாசிப்புப் பழக்கத்தின் அவசியத்தைப் புரியவெச்சுட்டாலே போதும். மாணவர்களே தேடலை விரிவுபடுத்திக்குவாங்க.
பெரும்பாலான அரசு நூலகங்களிலும்கூட குழந்தைகளுக்குப் பயன்படக்கூடிய புத்தகங்கள் இருப்பதில்லை என்பதுதான் யதார்த்த உண்மை. அதற்கு உடனடியாவும், சிலர் குரல் கொடுப்பதாலும் மட்டுமே தீர்வு கிடைச்சிடாது. அதனால, என்னால் இயன்ற அளவுக்குக் குழந்தைகளுக்கான புத்தங்களை வாங்க ஆரம்பிச்சேன். வாசிப்பு முகாம் தொடங்க நினைச்ச நேரம். `வாசிப்பு முகாமை நடத்தி என்னாகப் போகுது. உடனே மாற்றம் வந்துடுமா?'னு நிறைய எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டேன். அதுக்கெல்லாம் என் செயல்பாட்டால் பதில் சொல்ல நினைச்சேன்.

என் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை கிராமம். அங்கதான் சில ஆண்டுகளுக்கு முன்பு கோடை விடுமுறை தருணத்துல, பத்து நாள்கள் வாசிப்பு முகாமை நடத்தினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைச்சுது. பிறகு, நான் வசிக்கிற நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் சுற்றுவட்டாரப் பள்ளிகளில் முகாம் நடத்த முயன்றேன். ஆனா, நிறைய சவால்கள் தடையா இருந்துச்சு.

அதனால, `இளந்தளிர் அறக்கட்டளை' ஒன்றைத் தொடங்கி, என் வீட்டுலயே முகாம் நடத்த ஆரம்பிச்சுட்டேன். தொடர்ந்து பல வருஷமா சனி, ஞாயிறு மட்டும் வாசிப்பு முகாமை நடத்துறேன்" என்பவர், பல ஆண்டுகளாகவே புத்தகம் வாங்குவதற்கு மாதச் சம்பளத்தில் மூவாயிரம் ரூபாயை ஒதுக்குகிறார்.

``பாடப் புத்தகங்களைப் படிக்கவே பல குழந்தைகள் ஆர்வம் காட்டுறதில்லை. அவங்களைக் கதைப் புத்தகங்கள் படிக்க வைக்கிறது பெரிய சவால். ஏன் படிக்கணும், வாசிப்புப் பழக்கத்தின் அவசியத்தைப் புரியவெச்சுட்டாலே போதும். மாணவர்களே தேடலை விரிவுபடுத்திக்குவாங்க. ஆர்வமுடன் வாசிப்பு பழக்கம் மற்றும் பள்ளிக் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சுடுவாங்க. அதற்காக, குழந்தைகளைப் புத்தக வாசிப்பு முகாமுக்கு வரவைக்க, பரிசுப் பொருள்கள் தந்து ஊக்குவிக்கிறேன்.

வாரம்தோறும் என் வீட்டில் சனி, ஞாயிறுகளில் வாசிப்பு முகாம் மூணு மணிநேரம் நடக்கும். அதில் ஒருமணிநேரம்தான் வாசிப்புக்கு. மீதி நேரமெல்லாம் கதை சொல்றது, கிராமப்புறக் கலைகள் கத்துக்கிறது, தனித்திறமைகளை வெளிப்படுத்துவது, விளையாட்டு உள்ளிட்ட செயல்பாடுகள்தாம். இதனால் 50-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் வாசிப்பு முகாமுக்கு வர்றாங்க. அதில் சிலர் அவங்க ஊரில் சரியா இயங்காத நூலகங்கள் குறித்துப் புகார் தெரிவிச்சு, அவற்றைச் சிறப்பா செயல்படவும் வெச்சிருக்காங்க. இப்படி நான் எதிர்பார்த்த மாற்றங்கள் படிப்படியா நிகழ்ந்துகிட்டிருக்கு.

குழந்தைகள் விரும்பும் வகையிலான புத்தகங்கள் இருந்தால், நிச்சயம் குழந்தைகளும் நூலகத்துக்குச் சென்று வாசிப்புப் பழக்கத்தை வழக்கப்படுத்திப்பாங்க. ஆண்டுதோறும் நடக்கிற ஈரோடு புத்தகத் திருவிழாவுல 25 ஆயிரம் ரூபாய்க்கான புத்தகங்களை வாங்கிடுவேன். என்கிட்ட இரண்டாயிடம் புத்தகங்களுக்குமேல் இருக்கு. அவை பெரும்பாலும் குழந்தைகளுக்கான புத்தகங்கள். இன்னும் நிறைய புத்தகங்கள் வாங்கணும். அவையெல்லாம், எங்க ஊர்ல நூலகம் ஒன்றைத் தொடங்கும் என் கனவுத் திட்டத்துக்குப் பெரிதும் பயன்படும்.

தடைகள் இல்லாம, எந்தச் சாதனையும் மாற்றமும் உருவாகாது. அப்படித்தான், இன்றைக்குப் புத்தக வாசிப்பு முகாமை நடத்திட்டிருக்கேன். என் கணவரும் ஆசிரியர்தான். அவர் உட்பட குடும்பத்தில் எல்லோருமே என் முயற்சிக்குப் பெரிய ஊக்கம் கொடுக்கிறாங்க. அதனால, நல்ல மாற்றத்தைச் சீக்கிரமே நிறைவேற்ற முடியும்ங்கிற நம்பிக்கை எனக்கிருக்கு" - உற்சாகம் பொங்கக் கூறுகிறார், ரேணுகா.
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.