வலுப்பெறுகிறது, 'மஹா' புயல் 24 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

Join Our KalviNews Telegram Group - Click Here
சென்னை:அரபிக் கடலில், புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில், 24 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீனவர்கள், கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து, தென் மாநிலங்களில் பரவலாக பெய்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, அரபிக் கடலில், 'கியார்' என்ற புயல் உருவானது. இந்த புயல், இந்திய பகுதியில் இருந்து விலகி சென்றுள்ளது; நாளை, ஓமன் நாட்டில் கரை கடக்க உள்ளது. இந்நிலையில், இந்திய பெருங்கடலில், இலங்கை அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், பின், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலு பெற்றுள்ளது. இது, புயலாக உருவெடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயலுக்கு, ஓமன் நாடு வழங்கியுள்ள, 'மஹா' என்ற பெயர் வைக்கப்பட உள்ளது. புயல் காரணமாக, தமிழகத்தில், 24 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கையும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய துணை பொது இயக்குனர், பாலச்சந்திரன் கூறியதாவது:குமரி கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, இன்று மாறும்; பின், புயலாக வலுப்பெறும்.இந்த புயல், அரபிக் கடலின் வடமேற்கு திசையில், லட்சத்தீவை கடந்து செல்லும்.

அதனால், கடல் அலைகள் கொந்தளிப்பாகவும், சூறைக் காற்றுடனும் காணப்படும்.எனவே, மீனவர்கள், இரண்டு நாட்களுக்கு, அரபிக் கடலுக்குள் செல்ல வேண்டாம். குமரி கடல் பகுதி, தெற்கு கேரள பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு போன்ற பகுதிகளுக்கு, மீனவர்கள் செல்ல வேண்டாம். சென்னையில் லேசான மழை தொடரும். மேலும், 24 மாவட்டங்களில், மிதமானது முதல், கனமானது வரை மழை பெய்யும்.

நேற்று வரை, சராசரியாக, 17 செ.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால், 20 செ.மீ., மழை பெய்துள்ளது.இவ்வாறு, அவர்கூறினார். தற்போது, அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள, கியார் புயல், ஓமன் நாட்டில் நாளை கடக்கும் நிலையில், புதிதாக உருவாகும் புயலும், ஓமனை நோக்கி செல்லும் என, வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தயாராக இருக்க கலெக்டர்களுக்கு உத்தரவு''வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள, அனைத்து மாவட்ட கலெக்டர்களும், தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது,'' என, வருவாய் நிர்வாக ஆணையர், ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:குமரி முனை, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் நிலை கொண்டிருந்த, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது.

அதன் காரணமாக, வரும் இரண்டு நாட்களுக்கு, தென் தமிழகத்தில், கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, முதல்வர் உத்தரவின்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களும், தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு, 770 படகுகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்றன. அவற்றில், 763 படகுகள் கரை திரும்பி விட்டன; ஏழு படகுகள், கடல் பகுதியில் உள்ளன.

இரண்டு படகுகளுக்கு, தகவல் கொடுத்து விட்டோம்.மீதமுள்ள ஐந்து படகுகள் குறித்து, கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து, 525 படகுகள், கடலுக்கு சென்றன. இதில், 520 படகுகள் திரும்பி விட்டன. இரண்டு படகுகளை தொடர்பு கொண்டுள்ளோம். மூன்று படகுகளை, தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறோம்.

அந்த படகுகள், பாதுகாப்பான பகுதிகளில் உள்ளன. மாநில பேரிடர் படை, தேசிய பேரிடர் படை ஆகியவற்றில் பயிற்சி பெற்றவர்கள், தயார் நிலையில் உள்ளனர். அரக்கோணத்தில், 18 கம்பெனி, தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளனர். மீன் வளத் துறையில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்கள் அனைத்திலும், இன்று கன மழை இருக்கக் கூடும். வட மாவட்டங்களில், ஆங்காங்கே மழை இருக்கும். அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

விடுமுறை: மழை பெய்யும் நாட்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கு, விடுமுறை அளிப்பது தொடர்பாக, முடிவெடுக்கும் அதிகாரம், மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் சூழலுக்கேற்ப முடிவெடுப்பர்.என, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மழை வரும் மாவட்டங்கள்! கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி,ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார், அரியலுார், பெரம்பலுார், திருச்சி, கோவை, திண்டுக்கல், தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில், கன மழை முதல், மிக கன மழை வரை பெய்யும்
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்