வைட்டமின் டி குறைபாடு: பள்ளி மாணவர்களை வெயிலில் விளையாட ஊக்குவிக்க அறிவுறுத்தல்

வைட்டமின் டி குறைபாட்டை தவிர்க்க பள்ளி மாணவர்களை சூரியஒளி படும் வகையில் திறந்தவெளிகளிலும், மைதானங்களிலும் ஓய்வு நேரத்தில் விளையாட ஊக்குவிக்குமாறு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வம் குறைந்து வருவதுடன், செல்லிடப்பேசி மற்றும் கணினி உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

மேலும் விளையாட்டில் கவனம் செலுத்தாததால் வைட்டமின் டி உள்ளிட்ட சத்துக் குறைபாடு ஏற்படுவதாக மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை கருத்தில் கொண்டு அனைத்துப் பள்ளிகளிலும் பாட வேளையின்போது ஆசிரியர்கள் விளையாட்டின் அவசியம் குறித்து எடுத்துக்கூறி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், ஓய்வு நேரத்தில், சூரிய ஒளி படும் வகையில், திறந்த வெளிகளிலும், மைதானங்களிலும் மாணவர்களை விளையாட்டில் ஈடுபடச் செய்யவேண்டும். மேலும் இதற்குத் தேவையான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள், முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளார்.