பள்ளி மாணவர்களின் திறமைகளுக்கு தளம் அமைக்கும் கல்வித் தொலைக்காட்சி

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 8608844408


KALVITV

கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு திங்கள்கிழமை முதல் தொடங்கப்படவுள்ள நிலையில் அதில் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 நாட்டில் முதல் முறையாக பள்ளிக் கல்வித்துறைக்கென தனியாக தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கடந்த ஆண்டு தெரிவித்தார். இதையடுத்து படப்பிடிப்பு கருவிகள் கொள்முதல் செய்தல், நிகழ்ச்சிகளை உருவாக்குதல், ஊடகப் பிரிவுகளை ஏற்படுத்துதல் என பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன. கல்வித் தொலைக்காட்சிக்கான "ஸ்டூடியோ' சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டாவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கல்வித் தொலைக்காட்சிக்கான பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்றது.
 முதல்வர் தொடங்கி வைக்கிறார்: இந்தநிலையில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது. இதற்கான தொடக்க விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் முதல்வர் பழனிசாமி தொலைக்காட்சி ஒளி பரப்பை காலை 9 மணிக்கு தொடங்கி வைக்கவுள்ளார். விழாவில் பேரவை தலைவர் ப.தனபால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கல்வித்துறைச் செயலர், இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். இந்தத் தொலைக்காட்சி சேனலில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகளின் திறமையை வெளிப்படுத்தச் செய்யும் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
 யோகா பயிற்சி- நீட் ஆலோசனை: காலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள "பூங்குயில் கானம்' நிகழ்ச்சியில் இசையில் ஆர்வம் கொண்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தவுள்ளனர். "ஊனுடம்பு ஆலயம்' (காலை 6.30) நிகழ்ச்சியில் யோகா, உடற்பயிற்சி ஆகியவை கற்றுத்தரப்படும். "கல்வி உலா' (காலை 8.30) நிகழ்ச்சியில் தலா ஒரு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் சிறந்த செயல்பாடுகள் ஒளிபரப்பப்படும். இதுதவிர, ஆங்கில மொழியின் அடிப்படையைக் கற்பிக்க "ஆங்கிலம் பழகுவோம்' (நண்பகல் 1.30), 6-ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கணிதத்
 திறனை மேம்படுத்தும் "ஜியாமெட்ரி பாக்ஸ்' (காலை 11.30), நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான ஆலோசனைகளை வழங்கும் "எதிர்கொள் வெற்றிகொள்' (பிற்பகல் 3), இணையதளத்தின் மூலம் அறிவை மேம்படுத்திக் கொள்வது குறித்த "வலைதளம் வசப்படும்' (மாலை 4.30) என பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பப்படும். மாணவர்கள், ஆசிரியர்களுக்காக இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மறு ஒளிபரப்பாகும். அரசு கேபிளில் 200-ஆவது சேனலில் இந்தத் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளைக் காணலாம்.
 53 ஆயிரம் பள்ளிகளில் ஏற்பாடு: கல்வி தொலைக்காட்சி தொடக்க விழா நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாகும். இதை 53 ஆயிரம் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் கேபிள் இணைப்புக்குப் பதிலாக தனியார் டிடிஹெச் பொருத்தியிருப்பவர்கள் "யூ-டியூப்' மூலமாக கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணலாம் என அவர்கள் தெரிவித்தனர்.