Title of the document

தபால் துறை தேர்வில் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த தேர்வை மத்திய அரசு ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

தபால் துறையில் தபால் காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் உள்ள கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டன.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் இந்த நடைமுறையை கடுமையாக எதிர்த்தன. பாராளுமன்றத்திலும் இப்பிரச்சினை எதிரொலித்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று பிற்பகல் மாநிலங்களவையில் பேசிய மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படும் என அறிவித்தார்.

தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் அனைத்திலும் தேர்வு நடத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் தாமதமாக விளக்கம் அளித்தமைக்காக வருத்தமும் தெரிவித்தார்.

முன்னதாக, இந்த விவகாரத்தை தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் பாராளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பினர். தபால்துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், தேர்வை ரத்து செய்துவிட்டு தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் தேர்வை நடத்தும்படி வலியுறுத்தினர்.

இததொடர்பாக மத்திய மந்திரி நாளை விளக்கம் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டது. இந்த உறுதிமொழியை ஏற்காத அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post