KALVI NEWS : வாத்தியம் முழங்க வரவேற்றதால் மாணவர்கள் உற்சாக துள்ளல்!கோடை விடுமுறைக்கு பின், கோவையில் பள்ளிகள் நேற்று துவக்கப்பட்டன. புதிய மாணவர்களுக்கு மாலை அணிவித்து, வாத்தியங்கள் முழங்க, பூக்கள், இனிப்புகள் வழங்கி, ஆசிரியர்கள் வரவேற்றனர்.கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவர்களை வரவேற்கும் விதமாக, பள்ளி நுழைவாயிலில் வாழை மரம், மாதோரணங்கள் கட்டி, வண்ண கோலமிடப்பட்டு இருந்தது. மேள, தாளம் முழங்க, புதிய கல்வியாண்டுக்கு மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.
வெப்பம் தகிப்பதால், பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டுமென, தமிழக அரசுக்கு, ஒரு சாரார் கோரிக்கை விடுத்து வந்தனர். புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருவதால், விடுமுறையை அதிகரிக்கும் பட்சத்தில், பாடங்கள் நடத்த போதிய நாட்கள் கிடைக்காது என, அக்கோரிக்கையை பள்ளி கல்வித்துறை நிராகரித்தது. அதேநேரம், பள்ளிகளுக்கு நேற்று மாணவ, மாணவியர் துள்ளிக்குதித்து வந்தனர். இரு மாதங்களாக பிரிந்திருந்த நண்பர்கள், தோழியரை பார்த்து, சந்தோஷத்தில் குதுாகலித்தனர்.செல்வபுரம் வடக்கு மாநகராட்சி ஆரம்ப பள்ளியில், புதிய மாணவர்களை வரவேற்கும் விழா, தலைமையாசிரியர் சுசீலா தலைமையில் நடந்தது.

முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாவட்ட கல்வி அதிகாரி கீதா, கிராம நிர்வாக அலுவலர் பூம்பாவை ஆகியோர், மாணவர்களுக்கு மாலையிட்டு, சந்தனம் தடவி, பூ கொடுத்து வரவேற்றனர். முதலாமாண்டு சேர்ந்துள்ள மாணவர்களுக்கு வித்யாரம்பமும் செய்யப்பட்டது. குரும்பபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், மாணவர்களை வரவேற்கும் விதமாக ரூ.ஒரு லட்சத்தில் புதிய அலங்கார வளைவு, சுற்றுச்சுவரில் திருவள்ளுவர், பாரதியார், காமராஜர் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. பள்ளி அருகில் உள்ள விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்தி, வாத்தியங்கள் முழங்க, தலைமையாசிரியர் பாலன் மற்றும் ஆசிரியர்கள், புதிய மாணவர்களை பூக்கள் துாவி பள்ளிக்கு அழைத்து வந்தனர்.
மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில், பேண்டு, வாத்தியம் முழங்க, 201 புதிய மாணவர்கள் வரவேற்கப்பட்டனர். மாணவர்களை மகிழ்விக்கும் வகையில், 'மிக்கி மவுஸ்' பொம்மைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தலைமை ஆசிரியர் மைதிலி, ஆசிரியர் சக்திவேல் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பரிசாக பூச்செடி வழங்கினர்.
இறைவழிபாடு கூட்டத்துக்கு பின், புதிய வகுப்புகளில், மாணவர்கள் காலடி எடுத்து வைத்தனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் 'பயோமெட்ரிக்' கருவி மூலம் வருகை பதிவு செய்தனர். பாடப்புத்தகம், நோட்டு, கிரையான்ஸ், கலர் பென்சில் உள்ளிட்ட, 14 வகையான நலத்திட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. பெரும்பாலான தனியார் பள்ளிகள், மதியம், 1:00 மணி வரை மட்டுமே இயங்கின. பிளே ஸ்கூல், ஒன்றாம் வகுப்புக்கு புதிதாக சேர்ந்த குழந்தைகள், அழுது கொண்டே சென்றதும், வகுப்பு முடியும் வரை, நுழைவாயிலில் பெற்றோர் காத்திருந்த நிகழ்வுகளும், பல இடங்களில் காண முடிந்தது.சீர்வரிசை வழங்கல் மதுக்கரை அடுத்த க.க.சாவடி அரசு துவக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு உதவி பொருட்கள் வழங்கும் சீர் வரிசை விழா நேற்று நடந்தது.
மாகாளியம்மன் கோவிலில் இருந்து, பழங்கள், இனிப்பு வகைகள் அடங்கிய, ஒன்பது சீர்வரிசை தட்டுகளை, பெண்கள் எடுத்து வர, மேள, தாளத்துடன் ஊர்வலம் பள்ளியை அடைந்தது.மூன்று பீரோ, ஒரு டேபிள், மழலையர் மற்றும் பெரியவர்களுக்கான சேர்கள், மூன்று தண்ணீர் டிரம், மின் விசிறி, எல்.இ.டி., டியூப் லைட்டுகள், விளையாட்டு பொருட்கள் என, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டன.கடந்த கல்வியாண்டில்,பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்,பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி ஆபிதாபேகத்துக்கு, 2,000 ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டது. தேக்கு மற்றும் மூலிகை செடி கன்றுகள், 50 நடப்பட்டன.