கோவை தேர்வருக்கு காஷ்மீரில் மையம்: 'நெட்' தேர்வில் அதிர்ச்சிஉதவி பேராசிரியருக்கான, 'நெட்' தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்த கோவையை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவருக்கு, ஜம்மு - காஷ்மீரில், தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் நடத்தும் பொறுப்பு, ஒருங்கிணைப்பு ஆணையமான என்.டி.ஏவிடம்., ஒப்படைக்கப்பட்டுள்ளது. உதவி பேராசிரியர்கள் பணி மற்றும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான நெட் தகுதி தேர்வை இரண்டாம் முறையாக என்.டி.ஏ., இம்மாதம் நடத்துகிறது.இத்தேர்வுகள், கணினி முறையில் நடப்பதால், இன்று முதல் 28ம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடக்கவுள்ளது.

தேர்வுக்கான, ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது. இதில், கோவையை சேர்ந்த சில தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஜெயபிரகாஷ் கூறுகையில், ''தேர்வு மையத்துக்காக, கோவை, திருச்சி, சென்னை, மதுரை ஆகிய நகரங்களை மட்டுமே தேர்வு செய்தேன். ஆனால், ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் மையம் ஒதுக்கியுள்ளனர்.

மொழி, இடம் ஏதும் தெரியாத சூழலில் எவ்வாறு இச்சிக்கலை எதிர்கொள்வது என தெரிய வில்லை. தேவையற்ற மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர்.கோவையிலிருந்து காஷ்மீர் சென்றடைய, நான்கு நாள் தேவை என்கின்றனர்; அங்கிருந்து எனது மையம் அமைந்துள்ள இடம் குறித்தும் தெரியவில்லை. நெட் தகுதி இருந்தால் மட்டுமே பேராசிரியர் பணியில் தொடரமுடியும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 26ம் தேதி எனது தேர்வை எழுத முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. தமிழக அரசு தலையிட்டு, எனது மையத்தை தமிழகத்துக்குள் மாற்றி தரவேண்டும்,'' என்றார்.