2ம் வகுப்பு புத்தகத்தில் தேசிய கீதத்தில் பிழை'புதிய பாடத்திட்ட புத்தகத்தில், தேசிய கீதத்தில் உள்ள பிழையை திருத்தம் செய்ய வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக அரசின், பள்ளிக்கல்வி பாடத் திட்டம், 13 ஆண்டுகளுக்கு பின், மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புத்தகங்களும், பாடங்களும் புதிய வடிவிலும், புதிய அம்சங்களுடனும் தயாரிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், சில அதிகாரிகள், பேராசிரியர்கள் அலட்சியமாக செயல்பட்டதால், சில அம்சங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளன.இந்த வரிசையில், இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தேசிய கீதம் பாடல் வரிகள், தவறாக அச்சிடப்பட்டு உள்ளன. இரண்டாம் வகுப்புக்கான, முதல் பருவ கணக்கு மற்றும் சூழலியல் பாடத்துக்கான புத்தகத்தில், தேசிய கீதமும், தமிழில் அதன் பொருளும் அச்சிடப்பட்டுள்ளன. இதில், 10வது வரி இடம் மாறி, பிழை ஏற்பட்டுள்ளது.இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது:புதிய புத்தகங்களில், பல இடங்களில் எழுத்து பிழை, பொருள் பிழைகள் கண்டறியப்பட்டு உள்ளன. அதிலும், தேசிய கீதம் பாடல் வரிகளே தவறாக இடம்பெற்றிருப்பது, அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.இதை, பள்ளி கல்வி துறை அதிகாரிகள் உடனடியாக கவனித்து, பிழைகளை திருத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.