தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தில் நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை பின்பற்றப்படும் நிலையில், மீண்டும் இந்தி திணிப்பு முயற்சி நடைபெறுவதாக அனைத்து தரப்பினரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்நாட்டு மாணவர்கள் மீது இந்தி மொழியை திட்டமிட்டு திணிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருப்பதாகவும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்று தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் திங்கள்கிழமை (ஜூன் 3) பள்ளிகள் திறக்கப்படும். மாணவர்களின் நலனுக்கேற்ப தமிழக அரசு புதிய பாடத்திட்டங்களை மாற்றி அமைத்து இருப்பதாலும், 210 நாட்கள் வேலை நாட்களாக உள்ளதாலும், விடுமுறையை நீட்டிக்க வாய்ப்பில்லை என்றார். விடுமுறையை அதிகரிக்கும் பட்சத்தில், பாடத்தை முழுமையாக மாணவர்களிடத்தில் கொண்டு செல்ல முடியாது. தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையானது ஜூன் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.