அரசு தேர்வுகள் இயக்குனராக உஷாராணி நியமனம்


பள்ளிக்கல்வி துறையில் அரசு தேர்வுகள் இயக்குனராக பணிபுரிந்த தண்.வசுந்தராதேவியின் மறு பணிநியமன காலம் 30-ந் தேதியுடன் (இன்று) முடிவடைவதால், அரசு தேர்வுகள் இயக்குனர் பணியிடம் 1.7.2019 முதல் காலியாக இருக்கும் நிலை உள்ளது. இயக்குனர் அதனை சார்ந்த பணியிடத்துக்கு பதவி உயர்வு பெற முன்னுரிமை பட்டியலின்படி, முந்துரிமையில் உள்ள இணை இயக்குனர்களின் பெயரை பள்ளிக்கல்வி இயக்குனர் பரிந்துரை செய்தார். அதன்படி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனராக இருந்த சி.உஷாராணி, அரசு தேர்வுகள் இயக்குனராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் செயலாளர் மு.பழனிசாமி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனராகவும், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குனர் என்.லதா, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் செயலாளராகவும் பணியிட மாறுதல் செய்யப்படுகிறார். இந்த அரசாணை 1.7.2019 (நாளை) முதல் நடைமுறைக்கு வருகிறது. மேற்கண்ட தகவல் பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.