ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: விருப்ப கலந்தாய்வுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

சார்ந்த அலுவலகங்களில் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிவோருக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பள்ளிக் கல்வித்துறையில் அனைத்து வகைப் பணியாளர்களும் புதிய உத்வேகத்துடன் செயல்படத்தக்க வகையிலும், அனைத்து அலுவலகங்களும் எந்தவிதப் புகாருக்கும் இடமின்றி செயல்படும் வகையிலும் 30.6.2019 அன்று மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோருக்கு (இளநிலை உதவியாளர் முதல் கண்காணிப்பாளர் வரை) ஜூலை 3-ஆம் தேதி மாவட்ட அளவில் விருப்ப கலந்தாய்வு நடத்தி இட மாறுதல் வழங்க முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்படுகிறது. 

நடைமுறைகளைப் பின்பற்றி... இந்த மாறுதல் கலந்தாய்வு எந்தவிதப் புகாருக்கும் இடமளிக்காத வகையில் பணியாளர்களைப் பெரிதும் பாதிக்காத வகையில் நடத்தப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்டு காலியாக உள்ள பணியிடங்களுக்கு மட்டுமே மாறுதல் வழங்க வேண்டும். இடமாறுதலுக்கு சில நடைமுறைகளைப் பின்பற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். தற்போதுள்ள பதவியில் 3 ஆண்டுகளுக்கும் மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரிவோரை வேறு அலுவலகத்துக்கு கண்டிப்பாக மாற்றம் செய்ய வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர், உதவியாளர்களுக்கு இது பொருந்தாது. அரசாணையின்படி மாவட்டக் கல்வி அலுவலகம் புதிதாக வேறு இடத்துக்கு பணியாளர்களுடன் மாற்றப்பட்டிருப்பின் அந்த அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு மாறுதல் வழங்கத் தேவையில்லை. எனினும், நிர்வாகக் காரணங்களால் பணியிடத்துடன் மாற்றம் பெற்ற பணியாளர்கள் மாறுதல் கோரினால் அவர்களையும் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். 

மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை: மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் பணியாளர்களில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் தீவிர உடல் நலிவுற்றவர்களை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது விருப்புரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தி அதன் அடிப்படையில் கலந்தாய்வில் முன்னுரிமை அளித்து இதனால் பிற பணியாளர்கள் பாதிக்காத வகையில் தக்க ஆணை வழங்கலாம். 
தங்கள் வருவாய் மாவட்டத்துக்குள் மாறுதல் செய்யும்போது அருகில் பணியிடம் ஏதும் இல்லாமல் அவர்கள் நீண்ட தொலைவு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் போது அவர்கள் அருகில் உள்ள வேறு மாவட்டத்துக்கு மாறுதல் கோரும் பட்சத்தில் அவ்வாறு மாறுதல் கோருபவர்களின் விவரங்களைப் பட்டியலிட்டு இணை இயக்குநருக்கு (பணியாளர் தொகுதி) ஜூலை 5-ஆம் தேதி நேரில் ஒப்படைக்க வேண்டும்.

தற்போதுள்ள பதவியில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஒரே இடத்தில் பணிபுரிபவர்கள் அனைவரும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் எவருக்கும் மாறுதல் அளிக்காமல் இருக்கக் கூடாது என அதில் கூறியுள்ளார்.