அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் சேர்க்கைக்கு அனுமதி: அரசாணை வெளியீடு

அதிக எண்ணிக்கையில் மாணவர்கள்விண்ணப்பித்துள்ளதால் அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீத இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அந்தந்தப் பல்கலைக்கழகத்திடம் அனுமதி பெற்று, இந்தக் கூடுதல் இடங்களில் மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் கலை-அறிவியல் படிப்புகள் மீது மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து, இணைப்பு கலை-அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத கூடுதல் இடங்களில் மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ள சென்னைப் பல்கலைக்கழகமும், அரசுக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களுக்கு தமிழக அரசும் அனுமதித்து வந்தன. இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 2019-20 கல்வியாண்டிலும் அதிகரித்துள்ளது. அதிக வரவேற்பு காரணமாக, விரும்பும் படிப்புகளில் இதுவரை இல்லாத வகையில் இந்தக் கல்வியாண்டில் கூடுதலாக 4-ஆவது வகுப்பை (செக்ஷன்) கல்லூரிகள் தொடங்கிக் கொள்ள சென்னைப் பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. இதுவரை ஒவ்வொரு படிப்பிலும் அதிகபட்சம் மூன்று வகுப்புகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தன.

இதுபோல, அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் இந்தக் கல்வியாண்டிலும் 20 சதவீத கூடுதல் இடங்களில் மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதற்கான அரசாணையை அரசு இப்போது வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்று, இந்த கூடுதல் இடங்களை நிரப்பிக்கொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
வரவேற்பு: அரசின் இந்த அனுமதிக்கு தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்தக் கூடுதல் இடங்களில் மாணவர் சேர்க்கை நியாயமான முறையில் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அந்த மன்றத்தின் பொதுச் செயலாளர் குமார் வலியுறுத்தியுள்ளார்.