Title of the document



அன்னுார் வட்டாரத்திலுள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்யும் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தப்பட்டன

.தமிழக அரசு கடந்த அக்டோபரில், வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலர்களின் வருகையை பதிவு செய்ய பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி கடந்த ஜனவரியில் அதற்கான கருவிகள் வாங்கப்பட்டன.

ஆனால் ஆசிரியர் ஒருவர் இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார்.இதனால் இரு மாதங்கள் இத்திட்டம் தடைபட்டது. உயர்நீதிமன்றத்தில் ஆசிரியரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

 இதையடுத்து, பள்ளிகளிலும், மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தும் பணி துவங்கியது.முதல் கட்டமாக, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இக்கருவி தரப்பட்டது.

அந்த பயோ மெட்ரிக் கருவி பள்ளியிலுள்ள கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டது.பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதவர்களின் விபரங்கள் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

 அன்னுார், சொக்கம்பாளையம், ஆனையூர், காட்டம்பட்டி, கெம்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை வரும் 3ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளன.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில்,'பயோ மெட்ரிக் கருவியில், ஏதாவது ஒரு விரலை பதிவு செய்ய வேண்டும். நம்முடைய ஆதாரின் கடைசி எட்டு எண்களை கம்ப்யூட்டரில் டைப் செய்தால், நம் போட்டோவுடன், வருகை பதிவாகிறது.இது ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது.

 விரலுக்கு பதில், கண் விழிகளை ஸ்கேன் செய்து வருகையை பதிவு செய்யும் கருவிகளும் சில பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.வருகை பதிவு செய்யும் போது அதனுடன் இணைந்த கம்ப்யூட்டர், இணைய தொடர்பில் இருக்க வேண்டும்.

இதன் மூலம் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களின் வருகையையும், மாவட்ட, மாநில கல்வி அதிகாரிகள் தெரிந்து கொள்ளலாம்,' என்றனர்.அடுத்த கட்டமாக, நடுநிலைப்பள்ளிகளிலும் பயோ மெட்ரிக் கருவி பொருத்தப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post