ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 8-ம் தேதி நடைபெற இருப்பதால் அதே தேதியில் நடைபெற இருந்த B.ED தேர்வு தேதி மாற்றம் !!

ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 8-ம் தேதி நடைபெற இருப்பதால் அதே தேதியில் நடைபெற இருந்த பி.எட். இறுதியாண்டுத் தேர்வு ஜூன் 13-ம் தேதி பிற்பகல் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 8, 9-ம் தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 15-ல் தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதியுடன் முடிந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்தம் 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி முதல் தாளுக்கு ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 341 பேரும், 2-ம் தாள் எழுத 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஜூன் 8-ல் முதல் தாள் தேர்வும், 9-ம் தேதி 2-ம் தாள் தேர்வும் நடைபெற உள்ளது. அடுத்த 2 மாதங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் ஜூன் 8-ம் தேதி அன்று பி.எட் இறுதியாண்டுத் தேர்வும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனால், ஜூன் 8 ஆம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாளை எழுதுவதா அல்லது பி.எட். இறுதியாண்டுத் தேர்வை எழுதுவதா என மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.

பி.எட். இறுதியாண்டு மாணவர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதலாம் என அரசு அறிவித்துள்ள நிலையில், திடீரென இரண்டு தேர்வுகளும் ஒரே நாளில் நடத்தப்படுவதால், பி.எட் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  பி.எட். தேர்வுத் தேதியை மாற்ற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் மாணவர்களின் குழப்பத்தைத் தீர்க்கும் வகையில் பி.எட். இறுதியாண்டுத் தேர்வை ஜூன் 8-ம் தேதிக்குப் பதிலாக ஜூன் 13-ம் தேதி பிற்பகலுக்கு மாற்றி உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பி.எட். தேர்வுத் தேதி மாற்றம் உயர் கல்வித்துறை மூலம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது