Title of the document


அரசு பள்ளிகளில், நன்கொடையாளர்கள் உதவியுடன், அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக, தலைமை ஆசிரியர்களுக்கு, உரிய அறிவுரை வழங்குங்கள்' என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன், கடிதம் அனுப்பி உள்ளார்.

கடிதத்தில்,
அவர் கூறியிருப்பதாவது: மாணவர்களின் பள்ளிக்கல்வி இடைநிற்றலை தடுத்து, அவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க, தமிழக அரசு, மாணவர்களுக்கு, 14 வகையான பொருட்களை, இலவசமாக வழங்குகிறது. நடப்புநிதியாண்டில், பள்ளிக் கல்வித் துறை வளர்ச்சிக்காக, 28 ஆயிரத்து, 757 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள், தற்போது, பல்வேறு தொழில் நிறுவனங்களில், உயர்ந்த பதவிகளில் உள்ளனர்; தொழில் அதிபர்களாகவும் உள்ளனர்.அவர்களும், சமூக அக்கறையுள்ள நிறுவனங்களும், அரசு பள்ளிகளைதத்தெடுக்க, தமிழக அரசு அழைப்பு விடுத்து உள்ளது.பள்ளிகளின் உள் கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள்,சுகாதாரமான கழிப்பறைகள், ஆய்வகங்கள், நுாலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த,முன் வர வேண்டும் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அரசு அழைப்பை ஏற்று, 2018- 19ல், பல்வேறு நிறுவனங்களின், சமூக பொறுப்புணர்வு நிதியில், 519 அரசு பள்ளிகளில், 58 கோடி ரூபாய் மதிப்பில், அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டன.அதேபோல, நடப்பாண்டில், அரசு பள்ளிகளை தத்தெடுக்க விரும்பும், சமூக அக்கறையுள்ள நிறுவனங்களுக்கு, எவ்வித தடையும், தாமதமும் இல்லாமல், உடனடியாக பணிகள் மேற்கொள்ள, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனுமதி வழங்க வேண்டும்.கல்வி என்ற ஒப்பற்ற செல்வத்தை, அடுத்ததலைமுறையினருக்கு வழங்க, சேவை மனப்பான்மையும், அன்பு உள்ளமும், தர்ம சிந்தனையும் உடைய, முன்னாள் மாணவர்களும், தொழில் நிறுவனங்களும், அரசு பள்ளிகளுக்கு உதவிட முன் வர வேண்டும்.

தற்போது பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால், மாணவர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல், இப்பணியை மேற்கொள்வது சிறப்பாக இருக்கும். எனவே, அனைத்து அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும், உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.இவ்வாறு, ராமேஸ்வர முருகன் கூறியுள்ளார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post