Title of the document



அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பெற்றோர்களை நேரடியாக சந்தித்து பள்ளியின் செயல்பாடு குறித்து ஆசிரியர்கள் விளக்கமிளக்க வேண்டுமென மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வனஜா உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வனஜா தலைமை வகித்து பேசுகையில், மாணவர்களுக்கு தேவையான புத்தகம், நோட்டுகள், சீருடைகள் ஆகியவற்றை உரிய தேதியில் பெற்று பாதுகாப்பாக வைத்து மீண்டும் பள்ளி திறப்பு நாளான ஜூன் 3ம் தேதியன்று பள்ளி திறந்த முதல் நாளன்றே மாணவர்களுக்கு தலைமையாசிரியர்கள்வழங்க வேண்டும்.பள்ளியின் மராமத்து பணிகளான குடிநீர் வசதி, கழிவறை வசதி, கட்டிட பழுது பார்ப்பு பணிகளை விடுமுறை நாட்களில் செய்து முடிக்க வேண்டும்.பள்ளியை தரம் உயர்த்துதல், தேர்வு மையம் கோருதல்,புதிய பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்தல், பள்ளியில் ஆங்கிலவழி கல்வி வகுப்புகள் துவக்க அனுமதி கோரி உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும். 2019- 2020ம் கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதால் அதுதொடர்பான பயிற்சிகளுக்கு ஆசிரியர்களை தயார்ப்படுத்த வேண்டும். அனைத்து உயர், மேல்நிலைப்பள்ளிகளிலும்குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு மைய குழு ஏற்படுத்த வேண்டும். 2 ஆண் ஆசிரியர்கள், 2 பெண் ஆசிரியர்கள், 2 பெற்றோர்கள், 2 மாணவர்கள், 2 மாணவியர்கள் அடங்கிய குழு அமைத்து அறிக்கையை மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த ஆசிரியர்கள், பெற்றோர்களை சந்தித்து பள்ளியின் செயல்பாடு மற்றும் தேர்ச்சி பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றார்.

 பின்னர் வட்டார கல்வி அலுவலர்களுக்கு நடந்த ஆய்வு கூட்டத்தில் வனஜா பேசியதாவது:

பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்ப்பதின் வாயிலாக ஆசிரியர்களை உபரி பணியிடங்களாக கருதப்படுவதை தவிர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களை வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டு கொள்ள வேண்டும். புதுக்கோட்டைமாவட்டத்தில் உள்ள 84 நடுநிலைப்பள்ளிகளில் அரசுஅனுமதியின்படி ஆங்கில வழிக்கல்வி எல்கேஜி முதல் யூகேஜி வகுப்புகள் துவங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பள்ளி ஆண்டாய்வில் சுட்டி காட்டப்பட்டுள்ள குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை வட்டார கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். 2019-2020ம்கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இப்பாடங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டத்துக்கேற்ப ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.மாணவர்களுக்கு தேவையான இலவச புத்தகம், நோட்டு, சீருடை, புத்தகப்பை, காலனி மற்றும் வண்ண கிரையான்களை முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து பெற்று வட்டார கல்வி அலுவலகங்களில் வைத்து பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் விடுமுறை நாட்களில் இயங்காமலும் உரிய அனுமதி பெறப்பட்டு பள்ளி நடைபெறுகிறதா என்பதை உறுதிபடுத்த வேண்டும். நர்சரி பள்ளிகளின் செயல்பாடுகள் தொடர்பான மாதாந்திர அறிக்கையை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.மாவட்ட கல்வி அலுவலர் ராகவன், இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் குணசேகரன், அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் அமுதா மற்றும்பலர் பங்கேற்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post