Title of the document


மக்களவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பெற்றோர், பொதுமக்களிடையே பள்ளி மாணவர்கள் மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
 இந்தப் பணியில் தேர்தல் ஆணையமும், கல்வித்துறையும் இணைந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
 மக்களவைத் தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விளக்கக் கூட்டங்கள் நடத்துவது, குறும்படங்கள் திரையிடுதல், விழிப்புணர்வுப் பேரணி, துண்டுப் பிரசுரம் வழங்குதல், கையெழுத்து இயக்கம் நடத்துதல், உறுதிமொழி எடுத்தல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.
 இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு வாக்களிப்பதன் அவசியத்தை விளக்கும் வகையில் கடிதம் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தனியார், அரசுப் பள்ளிகளை கல்வித்துறை கேட்டுக் கொண்டது.
 அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 அதற்குத் தேவையான அஞ்சல் அட்டைகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர்களிடம் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் அஞ்சல் அட்டைகளில், வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை எழுதி தங்களது பெற்றோர் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
 சங்கல்ப் பத்ரா: சென்னை மாவட்டத்தைப் பொருத்தவரை, நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி "சங்கல்ப் பத்ரா' என்ற திட்டம் மாவட்ட தேர்தல் ஆணையம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலானதில் இருந்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து வணிக வளாகங்கள், சாலையோரக் கடைகள், சந்தைகள் உள்ளிட்டவற்றுக்கு வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விளக்கி வருகிறோம்.
 தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி "சங்கல்ப் பத்ரா' என்ற உறுதிமொழி பத்திரத்தை பள்ளி மாணவ, மாணவிகளிடம் வழங்கி அதை பெற்றோர், பொது மக்களிடம் கொடுத்து உறுதி பெறுமாறு அறிவுறுத்தி உள்ளோம்.
 இதுவரை 3 லட்சம் பேரை உறுதிமொழி பத்திரம் சென்றடைந்துள்ளது. அதில், "எனக்கு ஜனநாயக கடமையாற்றும் வயது இல்லை.
 அதனால் அன்பு பெற்றோரே, வரும் மக்களவைத் தேர்தலில் தாங்கள் தவறாது வாக்களிக்க வேண்டுகிறேன்' என்று குழந்தைகள் பெற்றோருக்கு வேண்டுகோள் விடுக்கும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
 மேலும், "இந்தத் தேர்தலில் கட்டாயம் வாக்களிப்பேன்' என்று குழந்தைகளுக்கு உறுதிமொழி அளித்து, பெற்றோர் கையெழுத்திடும் அம்சங்களும் உறுதிமொழி பத்திரத்தில் இடம் பெற்றுள்ளன.
 அவ்வாறு கையெழுத்து பெற்ற உறுதிமொழிப் பத்திரங்களை மாணவர்கள், தங்கள் ஆசிரியர்களிடம் வழங்கி வருகின்றனர் என தெரிவித்தனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post