Title of the document

அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் சிறை சென்ற 41 பேருக்கு தேர்தல் பணி வழங்கவில்லை யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் ஆசிரியர்கள் புலம்பல்

*அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் சிறை சென்ற 41 பேருக்கு வாக்குச்சாவடி அலுவலர் பணி வழங்கவில்லை. இதை யாரிடம் முறையிடுவது என்று ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்*

*தமிழக அளவில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளடங்கிய ஜாக்டோ ஜியோ கூட்டமையினர் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு, புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினர்*

*இவை எதற்குமே மசியாத மாநில அரசு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறைக்கு அனுப்பியதோடு தற்காலிக ஆசிரியர்களை பணியில் அமர்த்தப்போவதாக விண்ணப்பங்களை பெற செய்து மிரட்டியது*

*இதனால் போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் சிறைக்கு சென்ற ஆசிரியர்களை தற்காலிக பணிநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது*

*இதில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பில் உள்ள ஆசிரியர்கள் தங்களது வஞ்சத்தை தீர்த்து கொள்வார்கள், அரசுக்கு எதிராக மறைமுகமாக வாக்காளர்களை திசைதிருப்பி விடுவார்கள் என ஆளுங்கட்சி பயப்பட துவங்கியது*

*இதனால் தேர்தலில் ஆசிரியர்களை பணி செய்யவிடாமல் தடுக்க மறைமுக வழிகளில் ஈடுபட்டது. அதில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் முடிந்தவரை போராட்டத்தில் சிறை சென்றவர்களையாவது தடுக்க நினைத்தது*

  *பெரம்பலூர் மாவட்டத்தில் சிறை சென்ற பள்ளி கல்வித்துறையின்கீழ் பணிபுரியும் 41 ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியே வழங்கவில்லை*

*இதுகுறித்து கலெக்டர், டிஆர்ஓவிடம் கேட்டால் கல்வித்துறை கொடுத்த பட்டியலில் இருந்து பாரபட்சம் பாராமல் தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றனர்*

*மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருளரங்கனிடம் கேட்டால், நாங்கள் அனைவரது பட்டியலையும் பரிந்துரைத்தோம். எப்படியோ சிறை சென்றதால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட 41 பேருக்கும் தேர்தல் பணி வழங்கப்படாமல் உள்ளது*

*இதுகுறித்து தேர்தல் பணிகளை ஒதுக்கிய மாவட்ட மகளிர் திட்ட அலுவலரை தான் கேட்க வேண்டும் என்கிறார்*

*மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் சாந்தாவோ, இதில் தனக்கு சம்மந்தமே இல்லாததுபோல் காண்பித்து கொள்கிறார். இதனால் தபால் வாக்கு உள்ளிட்ட குளறுபடிகளுக்கு எதிராக யாரின் தலைமையில் களமிறங்கி போராடுவது என்று தெரியாமல் ஆசிரியர்கள் தரப்பு உள்ளது*

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post