Title of the document



தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் 3 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு தபால் வாக்குக்கான படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார். தபால் வாக்குகளை மே 23-ம் தேதி காலை 8 மணி வரை செலுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவை பொதுத்தேர்தலும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வரும் 18-ம்தேதி நடக்கிறது. தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி முகாம், சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில், முதல் கூட்டத்திலேயே ஒருவர் வாக்குச்சாவடி நிலை அலுவலரா, வாக்குப்பதிவு அலுவலரா என்பதற்கான உத்தரவுவழங்கப்பட்டு, ஒரு வாக்குச்சாவடிக்கு எத்தனை அலுவலர்களோ, அவர்களும் பிரிக்கப்பட்டுள்ளனர்.4-ம் கட்டமாக வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் அதாவது ஏப்.17-ம் தேதி அவர்களுக்கான வாக்குச்சாவடி அறிவிக்கப்பட்டு விடும். இந்நிலையில், நேற்று முன்தினம்நடந்த 2-ம் கட்ட பயிற்சியின்போது, தேர்தல் பணியில் உள்ளஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தபால் வாக்கு அளிப்பதற்கான படிவங்கள் வழங்கப்பட்டுவிட்டன.

இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது:தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 3 லட்சத்து 27 ஆயிரத்து 903 பேருக்கு தபால் வாக்குப் படிவங்கள் வழங்கப்பட்டன. இவர்களில் 47,610 பேர் படிவங்களை பூர்த்தி செய்து திருப்பி அளித்துள்ளனர். அடுத்தடுத்து நடக்கும் தேர்தல் பயிற்சி வகுப்புகளின்போது படிவங்களை பூர்த்தி செய்து அந்தந்த மையங்களில் வைத்திருக்கும் பெட்டிகளில் செலுத்தலாம். தபால் வாக்குகளை பொறுத்தவரை வாக்குப்பதிவு முடிந்தபின்னரும், வாக்கு எண்ணிக்கைநடக்கும் மே 23-ம் தேதி காலை 8மணி வரை சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் செலுத்தலாம்.

இதுதவிர, பல்வேறு காரணங்களால் சொந்த தொகுதியிலேயே தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்கள், தேர்தல் பணி சார்ந்த வாகனஓட்டிகள், இணைய பராமரிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியில் ஈடுபடும் 2 லட்சத்து 38 ஆயிரத்து51 பேருக்கு ‘இடிசி’ எனப்படும்உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பணியாற்றும் பகுதியில்உள்ள ஏதேனும் ஒரு வாக்குச்சாவடியில் ‘இடிசி’ உத்தரவை காட்டி அவர்கள் வாக்களிக்கலாம்.காவல்துறையில் உள்ள வாக்காளர்களை பொறுத்தவரை 24,971 பேர் நேரடியாக தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் என கண்டறிந்து அவர்களுக்கு தபால்வாக்குப்படிவங்கள் வழங்கியுள்ளோம். அவர்களில் 16,660 பேர்படிவங்களை பெற்று வாக்களித்துள்ளனர்.

நேரடியாக தேர்தல் பணியில் இல்லாத இதர காவல் பணியில் ஈடுபடும் காவலர்கள் 10, 657 பேருக்கு இடிசி வாக்குப்படிவம் வழங்கப்படும். இதில் 7,686 பேர் படிவத்தை பெற்றுள்ளனர்.இதுதவிர ராணுவம், எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட துணை ராணுவப்படைகளில் பணியாற்றும் சேவை வாக்காளர்கள் 67 ஆயிரம் பேரில், வாக்களிக்க விரும்புவதாக தெரிவித்தவர்களுக்கு, மின்னணு தபால் வாக்குப்படிவங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவர்கள் பணியாற்றும் பகுதிக்கான தலைமை அலுவலகத்துக்கு இணையவழியாக படிவம் அனுப்பி வைக்கப்படுகிறது. வாக்காளர்கள் அதிகாரிகளிடம் இருந்து படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து, நேரடியாக தபால் மூலம் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பலாம்.

சேலத்தில் தேர்தல் பயிற்சியின்போது ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுபோல தேர்தல் பணியின்போது இறக்கும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். மேலும், தீவிரவாத தாக்குதலில் தேர்தல் பணியாளர்கள் உயிரிழந்தால் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post