Title of the document
 பள்ளிக்கல்வியில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.    இதையடுத்து ஜூன் 3- ஆம் தேதி முதல் அரசுப் பள்ளி மாணவ,  மாணவிகளுக்கு இலவசப் பாடநூல்கள் வழங்கப்படவுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பத்தாண்டுகளுக்குப் பிறகு 2018-2019-ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.    இதையடுத்து பாடத்திட்டம் மற்றும் உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்,  பேராசிரியர்கள்,  வல்லுநர்கள், உளவியல் நிபுணர்கள் வழிகாட்டுதலுடன் முதல் கட்டமாக 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.  வண்ணமயமான பக்கங்கள்,  க்யு.ஆர். குறியீடு,  யூ- டியூப் இணைப்பு, செல்லிடப்பேசி செயலியில் பதிவிறக்கம் என பல புதிய அம்சங்கள், தொழில்நுட்பங்களோடு அமையப்பெற்ற புதிய பாடநூல்கள் அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றன.    இதையடுத்து எஞ்சியுள்ள 2, 3, 4, 5, 7, 8, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்ட பணிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கி நடைபெற்று வந்தன.   இது குறித்து பாடத்திட்டக் குழுவினர் கூறுகையில், ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பில் 2, 7, 10, 12 ஆகிய நான்கு வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் 2019-20-ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்பட்டிருந்தது.    இதையடுத்து திருத்தப்பட்ட அரசாணையில் அனைத்து வகுப்புகளுக்கும் வரும் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.    இதையடுத்து பாடத்திட்டப் பணிகள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் முழு வீச்சில் நடைபெற்று வந்தன.    இந்த எட்டு வகுப்புகளுக்கும் பிறமொழிகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.    ஒவ்வொரு பாடத்துக்கான வடிவமைப்பு முடிவடைந்த பின்னர் அதை பேராசிரியர் கொண்ட குழுவினர் மேலாய்வு செய்துள்ளனர்.   நீட்,  ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளை கருத்தில் கொண்டு பாட நூல்களில் சிந்தனையைத் தூண்டும் பாடப் பகுதிகளை இணைத்துள்ளோம்.    தற்போது பாடத்திட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன. இதையடுத்து பாடநூல்கள் அச்சிடும் பணி விரைவில் நடைபெறவுள்ளது.     இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி வரும் கல்வியாண்டில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவ,  மாணவிகளுக்கு இலவசப் பாடநூல்கள் வழங்கப்படும் என்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post