Title of the document

நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்தில் பள்ளிக் கல்வி இயக்ககம் இயங்கி வருகிறது. இங்குதான் பள்ளிக்கல்வித் துறை சார்ந்த பல்வேறு அலுவலகங்கள் இயங்குகின்றன. அவற்றில்,  தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழுவும் இயங்கி வருகிறது. இந்நிலையில், அதே வளாகத்தில் இயங்கி வரும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்து, அதன் இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் சிலர் மீது  வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் எழுந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது, கட்டணக் குழுவில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சையும்  எழுந்துள்ளது. சென்னை அடுத்த வளசரவாக்கம் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் அதிக கட்டணம் வசூலித்து வருவதாக பெற்றோர் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கான கட்டணம்  நிர்ணயம் செய்யும் குழுவில் கடந்த முறை தலைவராக இருந்த நீதிபதி சிங்காரவேலு, இதுபோன்ற அதிக கட்டண வசூல் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தி வந்தார்.

அதிக கட்டணம் வசூலித்தது தெரியவந்தால் குறிப்பிட்ட அந்த பள்ளியிடம் இருந்து கூடுதல் தொகையை திரும்ப பெற்றும் கொடுத்தார்.  இந்நிலையில், கடந்த ஆண்டு நீதிபதி சிங்காரவேலு ஓய்வு பெற்றுச் சென்றார். அவருக்கு பதிலாக தற்போது புதிய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் தனியார் பள்ளிகளுக்கான  கட்டணங்களை நிர்ணயம் செய்து வருகிறார். இந்நிலையில், மேற்கண்ட வளசரவாக்கம் தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலித்துள்ளனர். இதுகுறித்து கட்டண குழுவுக்கு பெற்றோர் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது.  ஆனால், அந்த புகார் மீது குழு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் கடந்த வாரம் பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பள்ளி  முதல்வர், கடந்த ஆண்டுக்கான கட்டண நிர்ணயம் தொடர்பாக கட்டணக் குழு நிர்ணயம்  செய்த உத்தரவை காட்டிப் பேசினார். ஆனால், அந்த உத்தரவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தொகைக்கும் பள்ளி நிர்வாகம் வசூலிக்கும் தொகைக்கும் வித்தியாசம் இருப்பதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை ஏற்காத பள்ளியின் முதல்வர் பெற்றோரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும், கட்டண குழு வேறு ஒரு உத்தரவு போட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள கட்டணத்தைதான் வாங்குவதாகவும் தெரிவித்துள்ளார். அந்த  உத்தரவை காட்ட வேண்டும் என்று பெற்றோர் கேட்டுக் கொண்டும், பள்ளி முதல்வர் அந்த உத்தரவை காட்ட மறுத்துவிட்டதாக பெற்றோர் கூறுகின்றனர்.மேலும், தற்போதைய கல்வி ஆண்டுக்கான கட்டணம் குறித்து ஏற்கனவே ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், வேறு ஒரு உத்தரவு எப்படி போட முடியும் என்று பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர். இந்த விவகாரத்தில்,  கட்டணக் குழுவில் பணியாற்றும் சிலர்,  அதுபோன்ற உத்தரவை வழங்கியுள்ளதாகவும் பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், இந்த உத்தரவு பெற்றதில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் பெற்றோர்  சந்தேகப்படுகின்றனர். அதனால், அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர்களிடம்  மனுவும் கொடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. பெற்றோர் தரப்பில் வழக்குப் போடவும் தயார் நிலையில் உள்ளனர். இதனால் பள்ளி நிர்வாகம் கலக்கம் அடைந்துள்ளது. இதுபோல, பல பள்ளிகளிலும் கூடுதல்  கட்டணம் வசூலிக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் தலையீடும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரச்னை பெரிதாகி வருவதை அடுத்து கட்டணக் குழுவின் தலைவர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று பள்ளிக் கல்வித்துறையின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்படி அல்லாமல் சிபிஐ விசாரணை நடந்தால், கட்டண குழுவில் பணியாற்றும் பலர் சிக்குவார்கள்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post