தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்களின் அசல் சான்றிதழ்களை திருப்பி ஒப்படைக்க இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுதனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் அசல் கல்விச் சான்றிதழ்களை சம்பந்தப்பட்டவர்களிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டுமென அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள், ஊழியர்களின் கல்வி சான்றிதழ்களை சம்பந்தப்பட்டவர்களிடமே திருப்பி ஒப்படைக்கவேண்டுமென அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி பாதிக்கும்

சான்றிதழ்களை திருப்பி ஒப்படைத்தால் அந்த கல்வியாண்டின் இடையிலேயே பேராசிரியர்கள் வேறு கல்லூரிகளுக்கு மாறிவிடக்கூடும். இதனால் மாணவர்களின் கல்வி முழுமையாக பாதிக்கும். மேலும் பொறியியல் கல்லூரிகளை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆய்வு செய்யும்போது ஆசிரியர்களின் அசல் கல்வி சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

ஏற்கெனவே 8 மாநிலங்களில்50 ஆயிரம் பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றுவதாகவும், சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு கல்வி நிறுவனங்களில் போலியாக பணியாற்றி வருவதாகவும் அறிக்கை வெளியாகியுள்ளது. அதிகாரம் இல்லைதனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றுவோரின் அசல் கல்வி சான்றிதழ்களை அவர்களிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிடும் அதிகாரம் அண்ணாபல்கலைக்கழகத்துக்கு கிடையாது. எனவே பேராசிரியர்கள் மற்றும்ஊழியர்களின் அசல் சான்றிதழ்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பாக அண்ணா பல் கலைக்கழகம் 2 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார்.