8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி ரத்து செய்ய எதிர்ப்பு !!

எட்டாம் வகுப்பு வரை, கட்டாய தேர்ச்சி வழங்கும் முறையை ரத்து செய்யக் கூடாது' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:
கல்வி பெறும் உரிமை சட்டப்படி, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர் களுக்கும், தேர்ச்சி வழங்குவது, 2010ல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால், தேசிய அளவில், இடைநிற்றல் விகிதம், மிகப்பெரிய அளவில் குறைந்தது.இந்நிலையில், எட்டாம் வகுப்பு வரை, கட்டாய தேர்ச்சி அளிக்கும் முறையை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அதற்கான சட்டத்திருத்தம், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, பா.ஜ., ஆளும் மாநிலங்கள் உட்பட, 24 மாநிலங்கள், கல்வி பெறும் உரிமை சட்டத்தை, திருத்த தீர்மானித்துள்ளன. அவற்றை பின்பற்ற, தமிழகமும் முடிவு செய்திருப்பது, அதிர்ச்சி அளிக்கிறது.அவ்வாறு செய்தால், வரும் கல்வியாண்டு முதல், ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்தப்படும்.
அதில், தோல்வி அடையும் மாணவர்கள், உடனடியாக, மறு தேர்வு எழுத வேண்டும். தேர்ச்சி அடையாதவர்கள், அதே வகுப்பில், மேலும் ஓராண்டு படிக்க வேண்டியிருக்கும்.அரசின் இந்த முடிவு, இடைநிற்றலை அதிகரிக்க செய்வதை தவிர, வேறு எந்த நன்மையையும் செய்யாது. எனவே, எட்டாம் வகுப்பு வரை, கட்டாய தேர்ச்சி முறையை, ரத்து செய்யக் கூடாது.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.