அரசு ஊழியர்களுக்கு பிப்ரவரி 4-இல் ஊதியம்
ஜாக்டோ ஜியோ போராட்டம் எதிரொலியாக அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் பிப்.4-ஆம் தேதி வழங்கப்படவுள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கருவூலத் துறையிலிருந்து வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட சம்பளப் பட்டியல் திரும்பப் பெறப்பட்டது.  அதைத் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு அவர்கள் வேலைக்கு வராத நாள்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு, திருத்தப்பட்ட சம்பளப் பட்டியல் வங்கிகளுக்கு அனுப்பும் பணி தற்போது தொடங்கியுள்ளது.  இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,  ஈடுபடாதவர்கள் என அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் அனைவருக்கும் ஜனவரி மாத ஊதியத்தை 31-ஆம் தேதி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.  திருத்தப்பட்ட சம்பளப் பட்டியல் அனுப்பப்பட்டு  அனைத்து ஊழியர்களுக்கும் ஜனவரி மாதத்துக்கான சம்பளம் பிப்.4-ஆம் தேதி வழங்கப்படும்